கோகா கோலா நிறுவனம் தெலுங்கானாவில் மூன்றாவது ஆலையை நிறுவ இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எஃப்எம்சிஜி நிறுவனமான கோகா கோலா தெலுங்கானா மாநிலத்தில் 700 கோடி ரூபாய் முதலீட்டில் 3ஆவது ஆலையை அமைக்க இருக்கிறது. இதற்கான திட்ட பணிகள் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் கோகா கோலா பிரைவேட் லிமிடெட் என்ற துணை நிறுவனத்தின் கீழ் தெலுங்கானா மாநிலத்தின் பெடப்பள்ளி மாவட்டத்தில் இந்த புதிய ஆலை அமைய உள்ளது. இந்த அறிவிப்பை தெலுங்கானா மாநிலத்தின் தொழில்துறை அமைச்சரான ஸ்ரீதர் பாபு வெளியிட்டார். கோகா கோலா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள், அமைச்சர் ஸ்ரீதர் பாபுவை அவரது அலுவலகத்தில் சந்தித்து, தங்களது திட்ட பணிகள் குறித்து விவரித்தனர். அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள நிறுவன தலைமையகத்தில் இருந்து நிறுவனத்தின் மூத்த அதிகாரியான ஜனார்த்தன் ரீஃப் தெலுங்கானாவிற்கு வருகை தந்து அமைச்சர் ஸ்ரீதர் பாபு உடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது தெலுங்கானா மாநில அமைச்சர் வெங்கட் ரெட்டியும் உடன் இருந்தார்.

தெலுங்கானா மாநிலத்தை சர்வதேச முதலீட்டாளர்களின் விருப்பமான முதலீட்டு மையமாக மாற்ற வேண்டும் என்று நோக்கத்தில் அம்மாநில அரசு பல்வேறு திட்டங்களை தங்களது தொழில் துறை மூலம் அறிவித்து வருகிறது. இதற்காக தங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்க விரும்பும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தான் தற்போது கோகா கோலா நிறுவனம் பெடப்பள்ளி மாவட்டத்தில் தங்களது மூன்றாவது ஆலையை நிறுவுவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
ஹைதராபாத்தை தவிர்த்து மாநிலத்தின் மற்ற பகுதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் மற்ற பகுதிகளிலும் தொழில்துறை வளர்ச்சி அடைந்து வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பல்வேறு சலுகைகளை நிறுவனங்களுக்கு வழங்கி வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் ஸ்ரீதர் பாபு, தற்போது உலகின் முன்னணி நிறுவனமான கோகா கோலா பெடப்பள்ளி மாவட்டத்தில் தங்களின் உற்பத்தி ஆலையை நிறுவுவது அந்தப் பகுதியின் வளர்ச்சிக்கும் மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கும் வித்திடும் என்றார்.
கோகா கோலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் ஸ்ரீதர் பாபு ஹைதராபாத்தில் கோகா கோலாவின் தொழில்நுட்ப மையத்தை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து கோகா கோலா நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெடப்பள்ளியில் புதிய உற்பத்தி ஆலையை நிறுவுவது என உறுதி செய்யப்பட்டது.கடந்த 2022 ஆம் ஆண்டில் தெலுங்கானா மாநிலத்தில் சித்திபெட் மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் கோகா கோலா நிறுவனம் இரண்டாவது ஆலையை நிறுவியது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications