இந்திய ஐபிஓ சந்தை எப்போதும் இல்லாமல் இந்த ஆண்டு மிகப்பெரிய முதலீட்டை ஈர்த்து வருவது மட்டும் அல்லாமல் பெரிய ஐபிஓ க்களையும் வெற்றி அடைய செய்துள்ளது. இதில் குறிப்பாக இந்த வாரம் நடந்த எல்ஜி ஐபிஓ முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய வேகத்தை கொடுத்தது என்றால் மிகையில்லை.
இதேபோல் இந்தியாவில் தற்போது வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய கிளை நிறுவனங்களின் ஐபிஓ மோகம் உருவாகியுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள காரணத்தால் கோகோ கோலா முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

இந்தியாவின் குளிர்பானங்கள் சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் கோகோ கோலா, தனது இந்திய பாட்டிலிங் நிறுவனமான ஹிந்துஸ்தான் கோகோ கோலா பெவரேஜஸ் நிறுவனத்தை ஐபிஓ மூலம் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளது.
இந்த ஐபிஓ மூலம் சுமார் 1 பில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 8,400 கோடி ரூபாய் திரட்டப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட கோகோ கோலா நிறுவனம், கடந்த சில வாரங்களில் முக்கியமான வங்கி அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் இது குறித்து விவாதித்துள்ளது, ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக வங்கியாளர்களை நியமிக்கவில்லை. இதேபோல் கோகோ கோலா நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஹிந்துஸ்தான் கோகோ கோலா பெவரேஜஸ் என்பது இந்தியாவில் கோகோ கோலா நிறுவனத்தின் முக்கிய பாட்டிலிங் பார்ட்னராக செயல்படுகிறது. இந்த நிறுவனம் 16 தொழிற்சாலைகளை நாடு முழுவதும் இயக்கி வருகிறது மற்றும் சுமார் 5,200 ஊழியர்களைக் கொண்டுள்ளது.
2024 ஆம் நிதியாண்டில், இந்நிறுவனத்தின் வருவாய் சுமார் 14,200 கோடி ரூபாயாக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட 10 சதவீதம் உயர்வு. மேலும் இந்திய குளிர்பான சந்தையில் கோகோ கோலா சுமார் 60 சதவீதம் சந்தைப் பங்கை வைத்துள்ளது, இது பெப்சி போன்ற நிறுவனங்களை விட அதிகம். இவ்விரு நிறுவனங்களுக்கும் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ன் கேம்பா முக்கிய போட்டியாளராக உள்ளது.
இந்த ஐபிஓ வில் ஹிந்துஸ்தான் கோகோ கோலா பெவரேஜஸ் நிறுவனத்தை சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 87,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பட்டியலிடும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் உணவு மற்றும் குளிர்பானங்கள் துறையில் மிகப்பெரிய ஐபிஓக்களில் ஒன்றாக இருக்கப்போகிறது.
இதேவேளையில் இந்த ஐபிஓ திட்டம் குறித்த பேச்சுவார்த்தை என்பது இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் உறுதியாக எதையும் சொல்ல முடியாது என்பதே உண்மை. இந்த ஐபிஓ அடுத்த ஆண்டுக்குள் நடைபெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications