இந்தியா ரீடைல் சந்தையில் குளிர்பான விற்பனை மிகப்பெரிய பங்கீட்டை கொண்டு உள்ளது, இந்த சந்தையை அடைய பன்னாட்டு நிறுவனங்கள் முதல் உள்நாட்டு நிறுவனங்கள் பெரும் போட்டிப்போட்டு வந்தது.
வெளிநாட்டு கோலா கம்பெனிகளின் வர்த்தகம், மலிவு விலை விற்பனை, விளம்பரம் ஆதிக்கத்தால் இந்தியாவில் பல பிரபலமான கோலா பிராண்டுகள் மாயமான கதை பலருக்கும் தெரியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு கோலா குளிர்பான நிறுவனங்களின் விளம்பர போட்டி இல்லாமல் இருந்தது.

சமீபத்தில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பழம்பெரும் கேம்பா பிராண்டை கைப்பற்றி கோலா மற்றும் குளிர்பான விற்பனையில் இறங்கியது. ஆரம்பமே அதிரடி என்பது போல் குறைவான விலையில் குளிர்பானங்களை விற்பனை செய்ய துவங்கியது. இதனால் சக போட்டி நிறுவனமான பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களும் விலையை குறைத்தது.
இதில் அடுத்தக்கட்டமாக ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பருவமழை பொய்த்ததால் குளிர்பான விற்பனை மோசமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது கோலா பிராண்டுகள் கிரிக்கெட் சீசன்-ஐ முக்கிய டார்கெட்டாக எடுத்துக்கொண்டு இரண்டாம் கோடைக்கால விற்பனைக்கு தயாராகி வருகிறது.
இனி இந்திய சந்தையில் பெப்சி, கோகோ கோலா, மட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Campa நிறுவனமும் உள்ளது. இதனால் போட்டியும் அதிகமாக உள்ளது, முகேஷ் அம்பானிக்கு இந்திய சந்தையை எப்படி பிடிக்க வேண்டும் என்பது நன்றாக தெரியும், இதேபோல் பெப்சி, கோகோ கோலா இந்திய சந்தையில் நீண்ட காலமாக இருப்பதாலும், தனது டிஸ்ட்ரிபியூஷன்-ஐ பெரிய அளவில் வைத்துள்ளது.
இதனால் போட்டியும் அதிகமாகவே இருக்கும், இந்த நிலையில் போட்டியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல பெப்சிகோ தனது கேடோரேட் ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க் (Gatorade) பிராண்டிற்காக கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை இணைத்துள்ளது.
அதே நேரத்தில் கடந்த வாரம் ரிலையன்ஸ் கேம்பா கிரிக்கெட் பானத்தை அறிமுகப்படுத்தியது, தனது சொந்த மும்பை இந்தியன்ஸ் அணியைப் பயன்படுத்தி உலகக் கோப்பையில் விரிவாக விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், Coca-Cola, ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை ஆகிய இரண்டிற்கும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களில் முதலீடு செய்கிறது. ரிலையன்ஸ் போலே கோகோ கோலா பிராண்ட் Limca Sportz என்ற புதிய குளிர்பானத்தை சிறப்பு தோற்றத்தில் அறிமுகம் செய்துள்ளது.
இதேபோல் பெப்சிகோ தனது பிற முக்கிய குளிர்பானங்களான பெப்சி, மவுண்டன் டியூ, ஸ்டிங் மற்றும் ஸ்லைஸ் ஆகியவற்றுக்கு ரன்வீர் சிங், ஹிருத்திக் ரோஷன், அக்ஷய் குமார் மற்றும் கியாரா அத்வானி ஆகியோரை விளம்பர தூதராக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications