கரப்பான் பூச்சி கட்சி என்ற பெயரில் இளைஞர்கள் தொடங்கிய கட்சி டிஜிட்டல் வடிவில் இருந்து நேரடியாக போராட்ட வடிவிற்கு மாறியுள்ளது. வழக்கு விசாரணை ஒன்றின் போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எப்போதும் போனை பார்த்து கொண்டு நேரத்தை வீண் செய்யும் இளைஞர்கள் கரப்பான்பூச்சி போன்றவர்கள் என கூறினார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த கருத்து தான் கரப்பான் பூச்சி என்ற கட்சிக்கு வடிவம் தந்து டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்துவது வரை கொண்டு வந்துவிட்டிருக்கிறது. நீதிபதியை கருத்தை அடுத்து அபிஜித் தீப்கே என்ற இளைஞர் Cockroach Janata Party என ஒரு சமூக வலைதள பக்கத்தை தொடங்கினார். இளைஞர்கள் மத்தியில் இதற்கு பேராதரவு கிடைத்தது. தற்போது கட்சி வடிவம் பெற்று டெல்லியில் போராட்டம் நடத்துவது வரை வளர்ந்திருக்கிறது.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே, டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் மத்தியில் பேசினார். அப்போது கடந்த 5-10 நாட்களாக, சமூக ஊடகங்களில் ஒரு பக்கத்தை நடத்துவதால் என்ன பயன் என்று மக்கள் என்னிடம் கேட்டு வருகின்றனர். கேமராவைத் திருப்பி, வீடுகளிலிருந்து எத்தனை கரப்பான் பூச்சிகள் வெளியே வந்துள்ளன என்பதை அவர்களுக்குக் காட்டுங்கள் என்று கூறினார். 'காக்ரோச் ஜனதா கட்சி' என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கட்சி அல்ல அரசின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள ஒவ்வொரு மாணவரின் குரல்தான் இந்தக் கட்சி என தெரிவித்தார்.
நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வு குளறுபடிக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடந்த போராட்டம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு அதிர்வலையை தரும் அளவுக்கு இளைஞர்களின் ஆதரவை பெற்றது தான் ஆச்சர்யம். லடாக்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்சுக், இந்த போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக கல்வி அமைப்பிலேயே மாற்றம் வேண்டும் என்பது இந்த இளைஞர்களின் கோரிக்கையாக இருக்கிறது. ஏற்கனவே ஈரான் போர் , பெட்ரோல், டீசல் விலை உயர்வு என பல நெருக்கடிகளை சந்திக்கும் பிரதமர் மோடிஉ தலைமையிலான அரசுக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற இந்த இளைஞர்களின் கட்சி பெரும் தலைவலியை தந்துள்ளது.
நேபாளம் உள்பட பல்வேறு நாடுகளிலும் அரசுகளுக்கு எதிராக ஜென் ஸீ மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அதற்கெல்லாம் சின்ன ஒரு விஷயம் தான் தீப்பொறியாக இருந்தது. பல ஆண்டுகளாக தங்கள் மனதில் இருந்த கோபம், ஏமாற்றம் உள்ளிட்டவற்றை மாணவர்கள் , இளைஞர்கள் போராட்டமாக வெளிப்படுத்தினர். இந்நிலையில் இந்தியாவிலும் கேலி கிண்டலுக்காக தொடங்கப்பட்ட ஒரு சமூக வலைதள பக்கம் இப்படி உண்மை போராட்டமாக மாறி கவனம் பெற்றுள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதே தங்களின் நோக்கம் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications

