நாடு முழுவதுமே சமூக வலைத்தளங்கள் எங்கும் Cockriach Janata party எனப்படும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தான் டிரெண்டான விஷயமாக இருக்கிறது. திடீரென கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்பது டிரெண்டாக என்ன காரணம்? இந்தியாவில் உண்மையிலேயே இப்படி ஒரு கட்சி உருவாகி இருக்கிறதா? என்பதை தற்போது நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
கடந்த 15ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் நியமனம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது நாட்டின் சில இளைஞர்களின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றம் தரப்பில் சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கினை விசாரித்த தலைமை நீதிபதி சூரியகாந்த் கரப்பான் பூச்சிகள் மற்றும் சமூகத்தின் ஒட்டுண்ணிகள் போல் சில இளைஞர்களின் செயல்பாடுகள் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

போலி பட்டம் பெற்றவர்களை அப்படி குறிப்பிட்டதாக பின்னர் அவர் விளக்கம் அளித்திருந்தாலும் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களை அவர் அவமதிக்கிறார் என பலரும் விவாதிக்க தொடங்கினர். இந்த நிலையில் தான் தலைமை நீதிபதி விமர்சனத்தால் கோபமடைந்த இளைஞர்கள் அந்த வார்த்தையே தங்களின் அடையாளமாக மாற்றி கொண்டு சமூக வலைதள பக்கத்தை தொடங்கினர்.
மே 16ஆம் தேதி டிஜிட்டல் கிரியேட்டரான அபிஜித் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற ஒரு நையாண்டி பக்கத்தை பேஸ்புக் மற்றும் எக்ஸ் பக்கங்களில் தொடங்கினார். மிதிக்க நினைத்தாலும் சாகாமல் உயிர்வாழும் கரப்பான் பூச்சிகள் நாங்கள் என தொடங்கப்பட்ட இந்த சமூக வலைதள பக்கம் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. தொடங்கிய மூன்றாவது நாளிலேயே 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இதில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் ஆன்லைன் நையாண்டி பக்கத்தை உருவாக்கி இருக்கும் அபிஜித் இதில் சேர சில தகுதிகளையும் நிர்ணயம் செய்திருக்கிறார். தலைமை நீதிபதி கூறியது போல சோம்பேறியாக இருக்க வேண்டும், வேலை இல்லாதவராக இருக்க வேண்டும், எப்போதும் ஆன்லைனிலேயே நேரத்தை செலவிடுபவராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். உறுப்பினர் பதிவு தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டனர் என அவர் கூறியிருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்களை கொண்டதாக இந்த பக்கம் மாறி இருக்கிறது மேலும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் உறுப்பினர்களாக தங்களை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த கட்சி சார்பாக தேர்தல் அறிக்கை ஒன்று கூட வெளியிடப்பட்டிருக்கிறது நீதிபதிகள் தங்களின் பணி ஓய்வுக்கு பிறகு அரசாங்க பதவிகளை பெற கூடாது என்பது முதல் வாக்குறுதியாக உள்ளது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அலையை உருவாக்கிய நிலையில் அதற்கு போட்டியாக மற்றொரு தரப்பினர் தேசிய ஒட்டுண்ணி முன்னணி என ஒரு பக்கத்தை உருவாக்கியுள்ளனர். நிஜ அரசியலில் இருப்பது போலவே இணையத்திலும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி போன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி நாங்களே என கூறிக்கொண்டு இந்த தேசிய ஒட்டுண்ணி முன்னணி செயல்பட்டு வருவது சுவாரசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜென் ஸீ இளைஞர்கள் மத்தியில் இந்த கட்சிகள் டிரெண்டாகி இருக்கும் நிலையில் இந்திய பாரம்பரிய அரசியல் கட்சிகள் இவற்றை உன்னிப்பாக கவனிக்க தொடங்கியுள்ளனர். ஏனெனில் நாளடைவில் இது உண்மையிலேயே கட்சியாக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டானாலும் ஆகலாம் என பலரும் கருத்து கூறுகின்றனர். இந்த கட்சியில் அகிலேஷ் யாதவ், மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், மகுவா மௌத்ரா, க்ரீத்தி ஆசாத் ஆகியோரும் பதிவு செய்து கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications

