சென்னையில் துவங்கினாலும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு உலகளாவிய சந்தையில் டெக் சேவைகளை அளித்து வரும் காக்னிசண்ட் நிறுவனம் கடந்த சில வருடத்தில் பல தடுமாற்றத்தை எதிர்கொண்டு தொடர்ந்து வேகமாக வளர்ச்சி அடையும் நிறுவனமாக தொடர்ந்து முன்னணியில் உள்ளது. ஆனால் ஊழியர்கள் மத்தியில் சம்பள உயர்வு, போனஸ் தொகை கொடுப்பது தொடர்பாக சில பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்த வேளையில், தற்போது இதற்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
காக்னிசண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான் ரவி குமார், சமீபத்தில் இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் நடைபெற்ற டவுன்ஹால் கூட்டத்தில் ஊழியர்களுடன் கலந்துரையாடினார். இப்போது ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் போனஸ் தொகை தொடர்பான முக்கிய விஷயங்களுக்கு நேரடியாக பதில் அளித்து ஊழியர்கள் மத்தியிலான குழப்பத்தை தீர்த்தார்.

இன்றளவில் அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களின் டவுன்ஹால் மீட்டிங்கில் சம்பள உயர்வும், போனஸ் தொகை, வேரியபிள் பே ஆகியவை தான் முக்கிய விவாத பொருளாக இருந்து வருகிறது. அனைத்து ஐடி நிறுவனங்களும் காலாண்டு முடிவில் லாபத்தை உயர்த்தி காட்ட, ஊழியர்களின் சம்பள உயர்வு, போனஸ், வேரியபிள் பே தொகையை குறைத்தும், நிறுத்தி வைத்தும் வருகிறது. இதனால் ஐடி நிறுவனங்களின் டவுன்ஹால் மீட்டிங்கில் இது முக்கிய விவாத பொருளாக உள்ளது.
காக்னிசண்ட் நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் கொடுக்க வேண்டிய ஐடி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை, ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தாமதம் குறித்து ஊழியர்கள் மத்தியில் கடந்த சில மாதங்களாக சலசலப்பு இருந்தது. இதை ரவி குமார் தீர்த்து வைத்துள்ளார்.
ரவி குமார் இதுக்குறித்து கூறுகையில், ஊழியர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு, போனஸ், வேரியபிள் பே தொகை அவரவர் தகுதிகள் மற்றும் செயல்திறன் அடிப்படையில் வழங்கப்படும் என உறுதி அளித்தார். சம்பள உயர்வை ஒத்திவைக்கப்பட முக்கியமான காரணம் நிறுவனத்தின் நிதிநிலை, புதிய முதலீடுகள், வளர்ச்சி பாதையை உறுதி செய்யப்பட எடுக்கப்பட்ட மூலோபாய நடவடிக்கை என்று அவர் தெரிவித்தார்.
மேலும், வேரியபிள் பே பெற நிர்வாக நிர்ணயிக்கப்பட்ட தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்த ஊழியர்கள், திட்டமிட்டபடி தங்களது உரிய தொகையை பெறுவார்கள் என்று அவர் உறுதிப்படுத்தினார். மேலும் வேரியபிள் பே தொகை மார்ச் மாதத்தில் வழங்கப்படும் என்றும், இதுக்குறித்த தகவல் ஊழியர்களுக்கு மார்ச் 10 ஆம் தேதிக்குள் ஈமெயில் வாயிலாக அறிவிக்கப்படும் என காக்னிசென்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications