சென்னையை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான காக்னிசண்ட் தமிழ்நாட்டை விட்டே வெளியேறுகிறதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தற்போது பன்னாட்டு ஐடி கன்சல்டிங் நிறுவனமான காக்னிசண்ட் 1994 ஆம் ஆண்டு குமார் மகாதேவா என்பவரால் சென்னையில் தான் தொடங்கப்பட்டது.
தற்போது இதன் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் இருக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து சென்னை அலுவலகம் தான் இதன் முக்கிய அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. காக்னிசண்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் அலுவலகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் திடீரென காக்னிசண்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் தங்களுடைய ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து இருப்பது தெரிய வந்திருக்கிறது.

காக்னிசண்ட் நிறுவனத்தின் தமிழ்நாட்டு அலுவலகங்களில் ஊழியர்கள் எண்ணிக்கை 81,000இல் இருந்து 71,000ஆக குறைக்கப்பட்டுள்ளது என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி குறிப்பிடுகிறது. காக்னிசண்ட் நிறுவனம் தமிழ்நாட்டை விடுத்து புவனேஸ்வர், ஹைதராபாத், விசாகப்பட்டினம், இந்தூர் ஆகிய நகரங்களில் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறதாம். குறிப்பாக, அந்த நகரங்களில் புதிதாக அதிக ஊழியர்களை வேலைக்கு தேர்வு செய்வதுமே தமிழ்நாட்டில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைவுக்கு காரணம் என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி குறிப்பிடுகிறது.
இந்தியாவில் சென்னை அலுவலகம் தான் இதன் முக்கியமான ஒரு மையமாக இருந்தது சென்னைக்கு அடுத்ததாக கோயம்புத்தூர் முக்கியமான ஒரு அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான ஐடி வேலை வாய்ப்பு தந்த காக்னிசண்ட் நிறுவனம் திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து இருக்கிறது. சென்னையில் 8 மில்லியன் சதுரடி பரப்பளவுள்ள அலுவலகத்துடன் செயல்பட்டு வந்த காக்னிசண்ட் தற்போது அதனை 7 மில்லியன் சதுரடியாக குறைத்துவிட்டது. கடந்த ஆண்டில் கூட காக்னிசண்ட் துரைப்பாக்கத்தில் தங்களுக்கு சொந்தமாக இருந்த இடத்தை 612 கோடி ரூபாய்க்கு நிறுவனம் விற்பனை செய்தது.
இந்த சூழலில் நிறுவனம் தமிழ்நாட்டை விடுத்து மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயர்வது ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெரிய அளவிலான அலுவலகத்தை அமைத்து வருகிறது காக்னிசண்ட். அங்கே சுமார் 1500 கோடி முதலீட்டில் அலுவலகம் அமைக்க உறுதி தந்துள்ளது.
மொத்தமாக காக்னிசண்ட் நிறுவனத்தில் 3,51,600 ஊழியர்கள் வேலை செய்கின்றனர். 2025இல் புதிதாக 14,000 பேருக்கு வேலை தந்திருக்கிறது இந்த நிறுவனம். நடப்பு ஆண்டிலும் இந்த நிறுவனம் சுமார் 25,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு தரப்படும் என அறிவித்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இந்த வேலைவாய்ப்புகள் இருக்காது என்றே நிறுவனத்தின் சமீபத்திய செயல்பாடுகள் உணர்த்துகின்றன.


Click it and Unblock the Notifications