உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் இந்த ஆண்டு தனது ஊழியர்களுக்கான வருடாந்திர சம்பள உயர்வை நான்கு மாதங்களுக்குத் தள்ளிவைத்துள்ளது.
மேலும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் சம்பள உயர்வு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐடி துறை சரிவில் இருந்து மீண்டு வருகிறது என கூறப்படும் இந்த சூழ்நிலையில் காக்னிசென்ட் நிறுவனத்தின் அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Nasdaq பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தங்கள் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு வழங்கியது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு ஆக்சென்சர் நிறுவனம் தனது வருவாய் மற்றும் லாப அளவீட்டைக் குறைத்து அறிவித்தது கவனிக்கத்தக்கது.
ஐடி ஊழியர்களுக்கான வருடாந்திர சம்பள உயர்வை நான்கு மாதங்களுக்குத் தள்ளிவைத்துள்ள தகவலை உறுதிப்படுத்திய காக்னிசன்ட் நிறுவனம் கூறுகையில், “ஆண்டுதோறும் திறமையான ஊழியர்களின் செயல்திறனைப் பாராட்டி சம்பள உயர்வு மற்றும் போனஸ் மூலம் எங்கள் பணியாளர்களை அங்கீகரிக்கிறோம், இந்த ஆண்டு தகுதியுள்ள பணியாளர்களுக்கான திறமையை பாராட்டும் வகையில் அவர்களுக்கான சம்பள உயர்வு ஆகஸ்ட் 1 முதல் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
காக்னிசென்ட் நிறுவனம் தகுதியுள்ள பணியாளர்களுக்குச் சம்பள உயர்வு அளிப்பதாகக் கூறியுள்ளதன் மூலம் அனைவருக்கும் சம்பள உயர்வு கிடைக்காது என்பதும் தெளிவாகிறது. தற்போது காக்னிசென்ட் நிறுவனத்தைப் போலவே பிற ஐடி நிறுவனங்களும் பாலோ செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த காக்னிசென்ட் நிறுவனம், தங்கள் ஊழியர்களில் பெரும்பாலானோர் கடந்த மூன்று ஆண்டுகளில் நான்கு சம்பள உயர்வுகளைப் பெற்றுள்ளனர் என்றும், கடைசியாக ஏப்ரல் 1, 2023 அன்று வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தகுதியுள்ள பணியாளர்களுக்கு உலகளவில் வருடாந்திர போனஸ்களும், சம்பள உயர்வும் வழங்கப்பட்டுள்ளன என்று காக்னிசென்ட் நிறுவனம் கூறியுள்ளது.

இதற்கு முன்னதாக, பிப்ரவரி மாதத்தில், இந்தியாவில் உள்ள தங்கள் ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் காக்னிசென்ட் ஊழியர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
காக்னிசென்ட் சென்னையில் உருவாகி அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தாலும் இந்நிறுவனத்தில் பெரும் பகுதி ஊழியர்கள் இந்தியாவில் பணியாற்றி வருகின்றனர். காக்னிசென்ட் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 347,700 இதில் 254000 பேர் இந்தியாவில் பணியாற்றி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications