காக்னிசென்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் (Cognizant) நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 2025ஆம் ஆண்டுக்கான போனஸை 100 சதவீதம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. க்ளாட் நிறுவனத்தின் AI ப்ளகின் அறிமுகம் செய்த நாளில் இருந்து உலகம் முழுவதும் டெக் நிறுவனங்கள் கதறி வரும் வேளையில் காக்னிசென்ட் ஐடி ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு வெளியிடுவதற்கு பின்னால் ஒரு முக்கியமான காரணம் உள்ளது என்பது தான் சுவாரஸ்யம்.
காக்னிசென்ட் நிறுவனத்தின் முக்கிய இலக்கான "வின்னர்ஸ் சர்க்கிள்" (Winner's Circle) எனப்படும் உயர்தர செயல்திறன் அளவை இந்நிறுவனம் எட்டியதால் அறிவித்துள்ளது. இந்த இலக்கை 2027ஆம் ஆண்டுக்குள் எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்ய வேளையில் இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே 2025இல் இதை சாதித்துள்ளது.

"வின்னர்ஸ் சர்க்கிள்" என்பது இந்நிறுவனத்தின் உள் அளவுகோல் ஆகும். அதாவது நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி, லாப மார்ஜின், செயல்பாட்டு திறன் ஆகியவற்றின் அடிப்படையில் உலகளாவிய போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது முதன்மை நிலையை அடைவது தான் வின்னர்ஸ் சர்க்கிள் இலக்கு. இது பொதுவாக சந்தையில் பயன்படுத்தும் அளவுகோல் கிடையாது, காக்னிசென்ட்-ன் உள் நிர்வாகம் உருவாக்கிய ஒரு இலக்கு. இதை அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
டிசம்பர் காலாண்டு வருவாய் எதிர்பார்ப்பை தாண்டியதன் மூலம் இந்த சாதனை அடைந்துள்ளது காக்னிசென்ட். மேலும் 2025இல் நிலையான நாணய அடிப்படையில் 6.4 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இது முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் மத்தியில் மிக அதிகம். உதாரணமாக அக்சென்ச்சர் 6.25%, எச்சிஎல் டெக் 4.8%, இன்ஃபோசிஸ் 3.15%, டிசிஎஸ் 0.78% வளர்ச்சி கண்டுள்ளன. விப்ரோ 1.83% சரிவை சந்தித்தது.
இது மட்டும் அல்லாமல் இந்நிறுவனம் AI தொழில்நுட்பத்தில் பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்து வருகிறது. 2025ல் நான்காம் காலாண்டு வருவாய் வளர்ச்சியை பார்க்கும் போது, ஏஐ துறையில் செய்யப்பட்ட முதலீடுகள் பலன் தரத் தொடங்கியுள்ளது என்று காக்னிசென்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர் செலவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும், AI திட்டங்கள் மூலம் வருவாய் அதிகரித்துள்ளது. இது அனைத்தும் சேர்ந்து தான் நிலையான நாணய அடிப்படையில் 6.4 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.
காக்னிசன்ட் நிறுவனத்தில் உலகளவில் சுமார் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவில் பணியாற்றுகின்றனர். சென்னையில் தலைமையிடமாக கொண்டு துவங்கிய காக்னிசென்ட் தற்போது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஒரு உலகளாவிய நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிறுவனத்தின் சிஇஓ ரவி குமார், முன்பு இன்போசிஸ் நிறுவனத்தில் முக்கிய அதிகாரியாக இருந்தவர்.
மேலும் காக்னிசென்ட் தற்போது தனது ஊழியர்களுக்கு 100 சகவீதம் போனஸ் வழங்குவதாக அறிவித்தாலும், எல்லோருக்கும் 100 சதவீதம் வழங்குமா அல்லது வழக்கம் போல் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்கள், அணிகளுக்கு மட்டும் இந்த முழு போனஸ் கிடைக்குமா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.
ஆயினும் இந்த முடிவு ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இது ஊழியர்களுக்கு ஊக்கத்தை அளிப்பதுடன், இந்திய ஐடி துறையின் வலிமையையும் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications