இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனக்கென்று தனி பாலிசி இருக்கும். அதன் அடிப்படையில் தான் அனைத்து செயல் முறையும் இருக்கும். அப்படித்தான் காக்னிசன்ட் நிறுவனமும் இந்தியாவில் பணி புரியும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ஆக வைத்திருந்தது. தற்போது இந்த வரம்பை 60 வயதாக உயர்த்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை நிறுவனம் ஒரு மெமோவில் ஊழியர்களிடம் பகிர்ந்துள்ளது.
இந்த பாலிசி இந்தியாவில் உள்ள அனைத்து காக்னிசன்ட் அலுவலகங்களிலும் பொருந்தும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் குறிப்பாக சந்தை நடைமுறை மற்றும் அனுபவம் அதிகம் கொண்ட திறமையானவர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58-ஆக நிர்ணயித்துள்ளன. சம்பளத்தில் மாற்றம் இல்லாமல் இடமாற்றம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் இந்த புதிய பாலிசி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றவுடன் ஓய்வூதிய நாளில் அந்தந்த ஊழியர்கள் வைத்திருக்கும் பங்குகளும் உடனடியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.
மேலும் இந்த புதிய பாலிசிக்காக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிடமிருந்து சிறப்பு அனுமதி பெறப்படாவிட்டால், இபிஎப் கணக்கு ஒரு ஊழியரின் 58-வது வயதில் மூடப்படும் வாய்ப்புள்ளது. இது குறித்து அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் தெரியவரும். இந்த புதிய பாலிசி கடந்த ஆண்டு நவம்பர் முதல் அமலுக்கு வந்துள்ளது.
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ரவிக்குமார், ஊழியர்கள் தாமாக வெளியேறுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். நிறுவனத்தின் வருடாந்திர ஊதிய உயர்வுக்கு கூடுதலாக ஏப்ரல் மாதத்தில் ஒரு முறை கூடுதல் சம்பள உயர்வை அறிவித்தார். 2022-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்திலிருந்து, நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் இந்த கூடுதல் சம்பள உயர்வை அறிவித்தார்.
ஊழியர்களின் வெளியேற்றம் அதிக அளவில் இருந்தாலும், 2024 ஆம் நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் 13,000 பேர் காக்னிசன்ட் நிறுவனத்திற்கு மீண்டும் திரும்பியதாக குமார் கூறியுள்ளார். அதே நேரம் முந்தைய காலாண்டில் 16.2 சதவீதமாக இருந்த ஊழியர்களின் வெளியேற்றம் தற்போது 14.6 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications