பெங்களுரு: ஐடி துறையினை சேர்ந்த முன்னணி நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனம், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் அதன் நிகரலாபம் 29 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 361 மில்லியன் டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது.
அமெரிக்கா நிறுவனமான இது, பெரும்பாலும் அதன் சேவைகளை இந்தியாவிலும் செய்து வருகிறது. அதே போல அதன் பெரும் பகுதி ஊழியர்களும் இந்தியர்களே.
பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் கொரோனா சமயத்தில் அதன் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கூறி வருகின்றன.

நஷ்டத்திற்கு என்ன காரணம்
எனினும் போதிய புராஜக்ட் திட்டங்கள் இல்லாத நிலையில் சில நிறுவனங்கள் நஷ்டம் கண்டு வருகின்றன. இந்த காக்னிசண்ட் நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் சற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், ஜூன் காலாண்டின் ஆரம்பத்தில் மிகப்பெரிய மால்வேர் வைரஸினால் அதன் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளது. இதுவும் நஷ்டத்திற்கு ஒரு காரணம் என்றும் தெரிவித்துள்ளது.

புதிய தலைமை நிதி அதிகாரி
இந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் ஜான் சீக்மண்ட் தலைமை நிதி அதிகாரியாக காக்னிசண்ட் அறிவித்துள்ளது. இதே தற்போதைய நிதி அதிகாரி கரேன் மெக்லொஹ்லின் ஆகஸ்ட் மாதம் இறுதி வரையில், தனது வேலையில் தொடருவார் என்றும் கூறப்படுகிறது. எனினும் இந்த ஆண்டு இறுதி வரை நிறுவனத்துடன் ஆலோசனை அதிகரியாக இருப்பார் என்றும் காக்னிசண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருவாய் வீழ்ச்சி
முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய் 4 பில்லியன் டாலராக உள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 3.4% வீழ்ச்சியாகும். எனினும் இந்த நிறுவனம் நடப்பு ஆண்டில் 2020 இதன் வருவாய் 16.4 - 16.7 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று இந்த நிறுவனம் கணித்துள்ளது.

முக்கிய பங்கு வகிக்கும் டிஜிட்டல் வருவாய்
எனினும் இந்த நிறுவனத்தின் முக்கிய வருவாயாக கருதப்படும் டிஜிட்டல் வர்த்தகம் 14% வளர்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது மொத்த வருவாயில் 42% ஆகும். நடப்பு ஆண்டின் முதல் பாதியில் வளர்ச்சி கிட்டதட்ட 50% டிஜிட்டல், பொறியியல், செயற்கை நுண்ணறிவு, பகுப்பாய்வு, சாப்ட்வேர் சேவை உள்ளிட்டவற்றால் தூண்டப்பட்டதாக தெரிவித்துள்ளது.