சென்னை: சர்வதேச ஐடி சேவைத் துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் காக்னிசன்ட் நிறுவனத்தில் பிரஷ்ஷர்களுக்கு வருடம் ரூ.2.52 லட்சம் சம்பளம் வழங்கப்படுவதாக வந்த அறிவிப்பு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமுக வலைத்தளத்தில் காக்னிசன்ட் நிறுவனத்தையும், அதன் தலைமை செயல் அதிகாரியான ரவி குமார்-ஐயும் திட்டி தீர்த்து வரும் வேளையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ஒரு சம்பவம் நடந்துள்ளது.
காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரவி குமார் தான் இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் சிஇஓ ஆக உருவெடுத்துள்ளார். காக்னிசன்ட் சிஇஓ ரவி குமார் சிங்கிசெட்டி கடந்த ஆண்டு மட்டும் 22.56 மில்லியன் டாலர் (சுமார் ரூ.186 கோடி) சம்பளம் பெற்றுள்ளார்.

52 வயதான ரவி குமார் சிங்கிசெட்டி 2023 ஜனவரியில் காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட ஒரு முறை பங்கு பரிசு வாயிலாக ரூ.169.1 கோடி மதிப்புள்ள 20.25 மில்லியன் டாலர் கிடைத்தது. இதன் மூலம் அவர் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப துறையில் அதிக சம்பளம் பெறும் சிஇஓ ஆக உருவெடுத்துள்ளார்.
காக்னிசன்ட் ஊழியர்களின் சராசரி சம்பளத்தை விட சிங்கிசெட்டியின் சம்பளம் 556 மடங்கு அதிகம் என்று கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் சிஇஓ தலைமை தாங்கும் நிறுவனத்தின் பணியில் சேரும் பிரஷ்ஷர்களுக்கு வெறும் ரூ.2.52 லட்சம் சம்பளம் அளிக்கப்படுகிறது என்பது தான் தற்போதைய முக்கிய விவாதமாக உள்ளது.
இந்தியன் டெக் & இன்பரா என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது மூலம் இந்தியா முழுக்க டெக் ஊழியர்கள், பட்டதாரிகள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பரவ துவங்கியது. இந்த பதிவில், "காக்னிசன்ட் நிறுவனம் 2024-ஆம் ஆண்டு பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளது. விண்ணப்பிக்கக் கடைசி தேதி ஆகஸ்ட் 14. சம்பளம் ஆண்டுக்கு ரூ.2.52 லட்சம்" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
15 வருடத்திற்கு முன்பு ஐடி சேவைத் துறையில் புதிதாகச் சேர்வோருக்குக் கொடுக்கப்பட்ட 3.1- 3.5 லட்சம் ரூபாய் வரையிலான வருடாந்திர சம்பளத்தை இன்றும் உயர்த்தப்படாமல் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியரான ரவி குமார் தலைமையிலான அமெரிக்க நிறுவனமான காக்னிசன்ட் இன்னும் குறைவாக வெறும் 2.52 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளத்தைக் கொடுக்க உள்ளது.
வருடம் 2.52 லட்சம் சம்பளம் என்றால் பிஎப் தொகை போக மாதம் 18000 முதல் 19000 ரூபாய் வரையிலான தொகையை மட்டுமே ஒருவரால் பெற முடியும். பெரு நகரங்களில் தற்போதைய விலைவாசியில் இது மிகவும் நெருக்கடியான வாழ்க்கை முறையைத் தான் அளிக்கும் என ஐடி ஊழியர்களுக்கும், மக்களும் புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications