சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தமிழ்நாட்டில் பொருளாதாரம், வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் பெரும் நகரங்களில் எளிய மற்றும் மேம்பட்ட போக்குவரத்து திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான புதிய திட்டங்களை வகுத்துள்ளது.
தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் பல பகுதிகளை மெட்ரோ ரயில் மூலம் இணைக்கும் பணிகளைத் தீவிரமாகச் செய்து வரும் வேளையில், சென்னையைப் போலவே கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ சேவை கொண்டு வரும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் திருச்சி மற்றும் சேலம் திட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள்: தமிழ்நாட்டில் சென்னையைத் தொடர்ந்து வேகமாக வளர்ச்சி அடையும் மாவட்டங்களாகக் கோவை மற்றும் மதுரை விளங்கும் நிலையில், இந்த நகரில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) ஏற்கனவே தயாரித்து மத்திய அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் திட்டத்தின் சிறப்புகளை மத்திய வீட்டு வசதி மற்றும் நகரப்புற விவகார துறையிடம் விளக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை மெட்ரோ:கோவையின் திட்டமிடப்பட்ட மெட்ரோ ரயில் அமைப்பு அவினாசி முதல் சத்தியமங்கலம் சாலை வரையில் சுமார் 39 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த பாதையில் உக்கடம் பேருந்து நிலையம், கோவை ரயில்வே நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம், சரவணம்பட்டி, கோவை மருத்துவக் கல்லூரி மற்றும் கோவை விமான நிலையம் போன்ற முக்கிய இடங்களை இணைக்கும். இந்த திட்டத்தின் மதிப்பீடு ரூ.10,740 கோடியாகும்.
மதுரை மெட்ரோ: மதுரையின் மெட்ரோ ரயில் திட்டம் ரூ.11,368 கோடி மதிப்பீட்டில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை ஆகிய இடங்களை இணைக்கும். இதில் 17 மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்படும், அவற்றில் மதுரை உயர் நீதிமன்றம், புதுர், சிம்மக்கல், மதுரை சந்திப்பு மற்றும் திருமங்கலம் மெட்ரோ நிலையங்கள் முக்கியமானவை.


Click it and Unblock the Notifications