தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் தற்போது தொழிற்துறை, ஐடி மற்றும் டெக் சேவை துறை, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறை எனப் பல பரிமாணத்தில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் தமிழ்நாடு அரசின் முக்கிய இலக்கான 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார அளவீட்டை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் வேகமாக வளரும் நகரங்களான சென்னை, கோவை, திருச்சி ஆகிய 3 முக்கிய மாவட்டத்தில் 3 முக்கியமான நிறுவனங்கள் புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது. இதன் மூலம் சென்னை, கோவை, திருச்சி ஆகிய பகுதிகளில் புதிதாக 1000 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளது.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக இருக்கும் முருகப்பா குரூப்-ன் விவசாயத் துறையைச் சார்ந்த நிறுவனமான கோரமண்டல் இண்டர்நேஷ்னல் நிறுவனம், கோயம்புத்தூரில் புதிதாகப் பயிர் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான நானோ விவசாயத் தீர்வுகளை உருவாக்க நானோடெக்னாலஜி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தைத் தொடங்கியுள்ளது.
கோரமண்டல் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் புதிய நானோடெக்னாலஜி R&D சென்டர் கோயம்புத்தூரில் இருக்கும் TICEL பயோ பார்க்-ல் அமைக்கப்பட்டு உள்ளது. TICEL பயோ பார்க்-ல் இடம்பெற உள்ள 6வது R&D சென்டர், அடுத்தத் தலைமுறை விவசாய உற்பத்தி சார்ந்து துவங்கப்பட்டு உள்ள 2வது R&D சென்டராகும்.
கோரமண்டல் இண்டர்நேஷ்னல் நிறுவனம் ஏற்கனவே ஐஐடி பாம்பே Monash Academy-யில் வைத்துள்ளது. தற்போது துவங்கப்பட்டு உள்ள புதிய நானோடெக்னாலஜி R&D சென்டரில் இந்நிறுவனம் புதிதாக அதிகப்படியான ஊழியர்களை நேரடியாகப் பணியில் சேர்க்க உள்ளது.
இதைத் தொடர்ந்து மும்பையைச் சேர்ந்த Esskay Design என்னும் இன்ஜினியரிங் நிறுவனம் திருச்சியின் முக்கிய ஐடி சிறப்புப் பொருளாதாரத் தளமான நாவல்பட்டு ஐடி SEZ பகுதியில் சொந்தமாக அலுவலகக் கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனத்தில் சுமார் 600க்கும் அதிகமானோர்-க்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளது.
நாவல்பட்டு ஐடி SEZ பகுதி திருச்சியில் சுமார் 147.61 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, ஏற்கனவே இப்பகுதியில் Scientific Publishing Company, Vdart Technologies, Vuram Technology Solution, I Link Systems போன்ற பல பிரபலமான உள்நாட்டு மற்றும் வெளிநாடு நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
கடைசியாக உலகளவில் பிரபலமான கல்வி சேவை நிறுவனமான Udemy சென்னையில் ப்ராடெக்ட், டெவலப்மென்ட், இன்ஜினியரிங் ஹப் துவங்க உள்ளதாக உறுதி செய்தது மட்டும் அல்லாமல் ஆட்சேர்ப்பு பணியையும் துவங்கி அசத்தியுள்ளது இந்த அமெரிக்க நிறுவனம். இந்த நிறுவனம் குறைந்தது 200 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications