கடந்த 2016 ஆம் ஆண்டில் சுபத்ரா தனது முதல் பேட்ச் ரெடி-டு-குக் நிறுவனத்தின் மூலம் 200 பாக்கெட் திணை இட்லி மாவை விற்பனைக்கு அறிமுகப்படுத்தினார்.
ஆரோக்கியமான கேப்பை மாவு, குதிரைவாலி மாவு உள்ளிட்ட தயாரிப்புகளுடன் அதற்கான வரவேற்பைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக தனது தோழியுடன் கோவையில் உள்ள சில ரீடெய்ல் கடைகளுக்கு சென்றார் சுபத்ரா. முதலில் அவரை கடைக்காரர்கள் கண்டுகொள்ளவே இல்லை.

பின்னர் அவர் கொண்டுவந்த பொருட்களை பார்த்துவிட்டு இட்லி வெண்ணிறமாக இல்லாவிட்டால் அது இட்லியே இல்லை என்று கூறினர். யாராவது காபி நிறம் அல்லது பச்சை நிறத்தில் இட்லியை செய்து சாப்பிடுவார்களா என்று கேலியாகவும் கேட்டனர்.
இதையெல்லாம் வாங்கி எங்கள் கடைகளில் வைக்க முடியாது என்று கைவிரித்து விட்டனர்.
இதனால் சுபத்ராவின் பிவிஆர் உணவுகள் நிறுவனத்தின் முதல் பேட்ச் 200 பேக்கெட்களும் விற்காமல் தேங்கி விட்டன. ஒவ்வொரு பாக்கெட்டும் தலா ஒரு கிலோ ஆகும். நஷ்டம் தொடக்கத்திலேயே கையைக் கடித்தது.
அடுத்த மூன்று நாட்களுக்கு சுபத்ரா எந்த தயாரிப்பையும் செய்யவில்லை. அடுத்த ஒரு மாதத்துக்கு தான் தயாரித்த பொம்மி தானியம் என்ற பிராண்டில் தயார் செய்த திணை மாவு பாக்கெட்களை மக்களுக்கு இலவசமாக சாம்பிளுக்கு தந்தார்.
கிட்டத்தட்ட 20 லட்ச ரூபாய் செலவழித்து தொடங்கிய நிறுவனத்தில் முதல் மாதத்தில் வெறும் 15 பாக்கெட்டுகள் மட்டுமே விற்றேன். எனது குடும்பத்தில் உள்ளவர்கள் தெரிவித்த எதிர்ப்பையும் மீறி நான் இந்த தொழிலில் இறங்கினேன். ஆனாலும் மனம் தளரவில்லை.
எனது கணவர் மட்டும் விடாமல் எனக்கு ஊக்கம் தந்து வந்தார். அதிக சம்பளம் வரக்கூடிய வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தத் தொழிலை நான் தொடங்குவதற்கும் அவர் ஆதரவாக இருந்தார் என்கிறார் சுபத்ரா.
ஊட்டியின் பிரபல எமரால்டு ஹைட்ஸ் காலேஜ் பார் விமனின் வைஸ் பிரின்ஸ்பால் மற்றும் சிஇஓ வேலையை உதறிவிட்டு தான் செய்திருப்பது சரியான செயல்தானா என்பது முதல் மாதத்தில் அவருக்குத் தோன்றியது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு 15 ஆண்டுகளாக பல்வேறு கல்லூரிகளில் டீனாகவும், பிரின்ஸ்பாலாகவும் பணியாற்றி ஐடி டிபார்ட்மென்ட்டை வளர்த்து வந்தவருக்கு இப்படியொரு சோதனை!
அவரது கற்றுவித்தல் முறையினால் சுபத்ராவின் மீது அவரது மாணவர்கள் அதிக மதிப்பு வைத்திருந்தனர். இந்நிலையில் 2017 ஆம் ஆண்டில் தனது பழைய மாணவர்கள் சிலரை அணுகி புட் ஸ்டால்களில் தனது தயாரிப்புகளுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ள உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
வார இறுதி நாட்களில் மாலை நேரங்களில் பலவிதமான சட்னிகளை செய்து டிபார்ட்மென்டல் ஸ்டோர் வாசல்களில் ஸ்டால் அமைத்து தோசை மற்றும் இட்லி சமைத்து பழைய மாணவர்கள் மூலம் விற்றார். இதற்காக அந்த மாணவர்களுக்கு உதவித் தொகையும் அளித்தார்.
இதனிடையே சுபத்ராவின் மாவு ஐட்டங்களுக்கு மக்களிடையே அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. கூடவே வியாபாரமும் பெருகியது. ஒரு மாதத்தில் ஒரு குறிப்பிட்ட கடையில் 63 பாக்கெட் மாவு விற்பனையானது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அதன்பின்னர் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது என்று நெகிழ்வோடு சொல்கிறார் சுபத்ரா.
முதல் ஆறு மாதங்களுக்கு பல்வேறு சிரமங்கள் இருந்தன. ஆட்கள் திடீரென்று வேலையை விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். சரியான வியாபாரம் இருக்காது. மீதமுள்ள ஆட்களை ஊக்குவித்து வேலையை செய்ய வைப்பதற்குள் போதும்போதுமென்றாகியுள்ளது.
இன்றைக்கு பொம்மி தானியம் 83 வகையான திணையிலான ரெடி-டு-குக் தயாரிப்புகளை விற்கிறது.
திணை மாவு, இட்லி தோசை மாவு, திணை சப்பாத்தி மிக்ஸ், திணை நூடுல்ஸ், பணியாரம், திணை பொங்கல், புட்டு போன்றவற்றையும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஆரோக்கியமான உணவு வகைகளையும் தயாரித்தார்.
அந்த தயாரிப்புகள் ரூ.45 முதல் ரூ.80 வரை திணையின் வகையைப் பொறுத்து விற்கப்பட்டது. பிவிஆர் புட்ஸ் இப்போது மிகப் பெரிய அளவில் வளர்ந்து ஆண்டுக்கு ரூ.3 கோடி அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது. திணையை சார்ந்து ஒரு தொழிலைத் தொடங்கி அதன்மூலம் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக சுபத்ரா உயர்வதற்கு அடிப்படையாக மூன்று காரணங்கள் உள்ளன.
முதலாவதாக தன்னிடம் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு எப்போதும் அவர்கள் பிறருக்கு வேலை தருபவர்களாக உயரவேண்டுமே தவிர மற்றவர்களிடம் கைகட்டி வேலைபார்ப்பவர்களாக ஆகக் கூடாது என்பதுதான்.
எல்லாவற்றுக்கும் மேலாக பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் ஆரோக்கியமான உணவை தயாரித்தலில் அதிக ஈடுபாடு காட்டியது. தொடக்கத்தில் இந்த உணவில் பிரசர்வேடிவ்கள் கலந்ததால் ஹார்மோன்கள் பிரச்னை ஏற்பட்டதை சுபத்ராவே உணர்ந்தார். இதையடுத்து அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டார்.
திணைகளில் ஆல்கலைன் சத்தும், குளூட்டன் ப்ரீயாகவும் அதிகளவில் புரதங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்டுகளும் அடங்கியுள்ளன. திணைகளை பயிர் செய்வதற்கு மிகக் குறைந்த அளவு தண்ணீர் இருந்தால் போதுமானது. அத்துடன் அவை விரைவாக வளரக்கூடிய பயிர்களாகும்.
ஐந்தடி உயரத்துக்கு வளரக்கூடியவை என்பதால் அறுவடைக்குப் பின் மிஞ்சும் வைக்கோலை கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.
திணைகள் நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டவை என்பதால் அவற்றுக்கு செயற்கை உரங்கள் தேவைப்படாது.
தனது பேராசிரியை வேலையை 2015 ஆண்டில் உதறிவிட்டு மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையத்துக்கு சுபத்ரா சென்றார். அங்கு அவர் திணைகளைப் பற்றிய ஆராய்ச்சியை செய்து திணையை துரிதமாக சமைப்பது எப்படி என்பது குறித்து அறிந்து கொண்டார். இதனால் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் பேச்சுலர்களுக்கும் மிக உதவியாக இருக்கும்.
அத்துடன் திணையை தண்ணீரில் ஊறவைக்காமல் பவுடராக அரைத்தால் அதில் உள்ள நார்ச்சத்துகளும் 45 சதவீத ஊட்டச்சத்துகளும் அழிந்துவிடுவதையும் கண்டறிந்தார்.
அதன் பின்னர் திணைகளை 8 மணி நேரத்துக்கு ஊற வைத்துவிட்டு மெதுவாக ஆட்டியபோது அதில் 85-90 சதவீத ஊட்டச்சத்துகள் தங்கியிருந்தது தெரியவந்தது. எனவே இந்த முறையைப் பின்பற்றி சுபத்ரா தனது திணை மாவுகளை தயாரித்து விற்க முடிவு செய்தார்.
தனது தயாரிப்பில் பிரசர்வேடிவ்களை பயன்படுத்தக்கூடாது என்று உறுதியாக இருந்த சுபத்ராவை அவருடன் பணியாற்றி பிற ஆராய்ச்சியாளர்கள் திணை பொருட்களை நீண்ட காலம் சேமித்து வைக்க முடியாது. இதற்கு குளிர்சாதன வசதி வேண்டும் என்று ஊக்கமற்ற வார்த்தைகளைக் கூறினர்.
2016 ஆம் ஆண்டில் எல்லாம் திணை வகை மாவுகளை யாரும் விற்பதில்லை. அத்துடன் அதிகபட்சம் திணை மாவை குளிர்சாதன வசதியில் 8 நாட்கள் மட்டுமே வைத்திருக்க முடியும். பின்னர் கெட்டு விடும். இதுபோன்ற பிரச்னைகளால் திணை தயாரிப்புகளுக்கு அவ்வளவு மார்க்கெட் இருக்காது என்றெல்லாம் சுபத்ராவிடம் பலர் கூறினர்.
இருப்பினும் தனது முயற்சில் பின்வாங்காத சுபத்ரா 4000 சதுர அடி பரப்பில் ரூ.20 லட்சம் செலவழித்து ஒரு ஆலையை அமைத்தார். நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் தானியங்களை சலிப்பது, அரைப்பது, ஊற வைப்பது, ரகப்படுத்துவது, பேக்கேஜிங் ஆகியவற்றுக்கான இயந்தரங்களை நிறுவினார்.
கோவையில் நாட்டிலேயே சிறந்த இயந்திரங்களை வடிவமைக்கும் நிபுணர்கள் உள்ளனர். அவர்களை வைத்து தானியங்களை மெதுவாக அரைக்கும் கிரைண்டர் மெஷின்களை தருவித்தார். அதிக வேகத்தில் தானியங்களை அரைக்கும்போது அதன் சூட்டில் ஏராளமான ஊட்டச்சத்துகள் அழிந்து விடுகின்றன. அதைத் தடுப்பதற்காக சுபத்ரா புத்திசாலித்தனமாகச் செயல்பட்டார்.
நிறுவனத்தின் தொடக்கத்தில் அங்கு தினமும் 1000 1 கிலோ பாக்கெட்களைத் தயாரிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் சுபத்ராவால் ஒரு நாளைக்கு 50 பாக்கெட்டுகளைக் கூட விற்க முடியவில்லை.
அவரது பொம்மி தானியம் தயாரிப்புகளை மக்கள் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியபின்னர் விற்பனை படு ஜோரானது. அந்தத் தயாரிப்புகளில் இருந்து வெளியாகும் வாசனை தங்களது பாட்டி செய்த பதார்த்தங்களில் இருந்து வருவது போன்று இருப்பதாக பலரும் சுபத்ராவை மனம் திறந்து பாராட்டினர்.
திணையின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்த நிலையில் சுபத்ராவின் விற்பனையும் சூடு பிடிக்கத் தொடங்கியது. இன்றைக்கு அவரது தயாரிப்புகள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஆகிய வழிகளில் விற்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் இந்தத் தயாரிப்புகள் அமேசான், பிளிப்கார்ட் ஆன்லைன் தளங்களிலும் கிடைக்கின்றன.
பலசரக்குக் கடைகள் மட்டுமல்லாமல் மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், அலுவலக கேண்டீன்கள், ஜிம்முகளிலும் நேரடியாக விற்கப்பட்டன. கோவையில் உள்ள 3000 படுக்கைகள் கொண்ட பிஎஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு எங்களது திணை மாவு உணவுகள் அளிக்கப்படுகின்றன என்று பெருமிதத்துடன் கூறுகிறார் சுபத்ரா.
அவரது பிவிஆர் புட்ஸ் இப்போது 600 கிராம் அளவிலான 3000 பாக்கெட்களை தினமும் தயாரிக்கின்றது. தேவைப்பட்டால் 5000 பாக்கெட்களை தயாரிக்கும் வசதியும் உள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் (TNAU) PVR Foods ஆதரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்டார்ட்அப் TN இன் கீழ் ரூ.15 லட்சத்தை விதை நிதியாக வழங்கியது.
உள்நாட்டு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கும் ஆரோக்கியமான உணவை ஊக்குவிப்பதற்கும் மத்திய வேளாண் அமைச்சகத்தின் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜ்னா - விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறை மறுமலர்ச்சிக்கான (RKVY-RAFTAAR) திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் மானியத்தையும் சுபத்ராவின் நிறுவனம் பெற்றது.
சுபத்ராவிடம் தற்போது 23 பெண்கள் உட்பட 30 பேர் பணிபுரிகின்றனர், அவர்களில் நான்கு பேர் உடல் ஊனமுற்றவர்கள். “முடிந்தவரை பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே எனது நோக்கம். ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று நான் கனவு காண்கிறேன், மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை அளிக்கிறேன்,” என்று அவர் கூறுகிறார்.
ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தியில், சில பெண்கள் பிவிஆர் புட்ஸின் தயாரிப்புகளை வாங்கி கேப்பை தோசை, சோளப் பொடியைப் பயன்படுத்தி செய்யப்படும் சத்து, கஞ்சி மற்றும் பிற உணவுப் பொருட்களை தயாரித்து விற்பதன் மூலம் ஒரு நாளைக்கு 8,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள்.
"அவர்களின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் டிரக் டிரைவர்கள் மற்றும் அருகிலுள்ள நிறுவனங்களில் பணிபுரியும் கூலித் தொழிலாளிகள். அவர்கள் தினையின் ஆரோக்கிய நன்மைகளைக் கண்டறிந்து சாலையோர உணவகங்களுக்குப் பதிலாக இந்த கடைகளில் சாப்பிடுகிறார்கள், ”என்று சுபத்ரா கூறுகிறார்.
"எங்கள் தயாரிப்புகளைப் பயன்படுத்தி தினை அடிப்படையிலான ஆரோக்கியமான உணவுக் கடையைத் தொடங்க உங்களுக்கு ஒரு அடுப்பு மற்றும் பாத்திரங்கள் மட்டுமே தேவை," என்று அவர் புன்னகையுடன் கூறுகிறார். சுபத்ராவுக்கு, தினை உணவு வணிகத்தால் கிடைக்கும் வருவாயைக் காட்டிலும், நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர் உருவாக்கும் வேலை வாய்ப்பும், மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்களும் திருப்திகரமாக உள்ளன.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications