கோயம்புத்தூர் குட்டி சென்னையாக மாறிவரும் பாதையில் வேகமாகச் சென்றுகொண்டு இருக்கும் வேளையிலும், அடுத்தடுத்து பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அலுவலகத்தை அமைத்து வரும் இந்தச் சூழ்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் முக்கியப் பிரச்சனைகள் இம்மாவட்டத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் 2வது பெரிய நகரமாக இருக்கும் கோயம்புத்தூர் நகரம், இப்போது இந்தியாவில் வேகமாக வளரும் 2வது பெரும் நகரமாகத் திகழ்கிறது. இந்த நிலையில் கோயம்புத்தூரில் சரியான மற்றும் வசதியான பேருந்து நிலையம், சிப்காட், மெட்ரோ சிஸ்டம், சரியான ரிங்க் ரோடு, பெரிய ஏர்போர்ட் முனையும் போன்ற முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை எனச் சென்னை அப்டேட்ஸ் பதிவிட்டு உள்ளது.

இந்தப் பதிவைப் பலரும் ஆதரித்த நிலையில் சவ்ரி ஸ்பீக்ஸ் எனப் பெயர் கொண்ட X பயணர் கோயம்புத்தூரில் சரியான ரயில்வே நிலையம், நகர்ப்புற ஆணையம், மத்திய பல்கலைக்கழகம், நகர விரிவாக்க அமைப்பு, சர்வதேச மைதானங்கள் போன்றவையும் இல்லை எனக் கூறியுள்ளார்.
இப்படிக் கோயம்புத்தூர் வளர்ச்சிக்குப் பல உள்கட்டமைப்புத் தேவைகள் இல்லாமல் இருப்பது இந்நகரின் வளர்ச்சிக்கு பெரும் தடையாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் திறக்கப்பட்ட லூலூ மால், பிராட்வே சினிமாஸ் போன்றவை அந்நகர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட மெட்ரோ, விமான நிலைய விரிவாக்கம் ஆகியவை தற்போது தேக்கமடைந்துள்ளது. ஐடி துறை நிறுவனங்களின் வருகை மூலம் கோயம்புத்தூர் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகத் தெரிந்தாலும், உள்கட்டமைப்பில் ஏற்பட்டு உள்ள வீழ்ச்சி நீண்ட கால வளர்ச்சிக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வளவு பிரச்சனைக்கு மத்தியில் கோயம்புத்தூர், குயில புடுச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம், மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம், அது எப்படி பாடுமைய்யா, அது எப்படி ஆடுமைய்யா, என்ற கணக்கா எப்படி ராக்கெட் வேகத்தில் வளர முடியும்.
கோயம்புத்தூர் தற்போது உற்பத்தி நகரமாக இருந்து ஐடி சேவை நகரமாக மாறி வருகிறது, இந்த நிலையில் வெளிநாட்டிலிருந்தும், வெளியூரிலிருந்து வரும் நிறுவனங்களுக்குப் போதுமான இடவசதியை ஏற்படுத்திக்கொடுக்கச் சுமார் 7 ஐடி பார்க்குகள் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் 34.37 லட்சம் சதுரடி பரப்பளவிலான ஐடி அலுவலக இடங்கள் தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications