கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் முக்கியமான மாவட்டமாக திகழும் கோயம்புத்தூர்-ன் உள்கட்டமைப்பையும், போக்குவரத்து வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தும் வேளையில், பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம் தொடர்பாக மக்களின் நீண்ட காலமாக முறையிட்டு வரும் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட உள்ளது.
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட பெரியநாயக்கன்பாளையம் மேம்பால திட்டக் குறைபாடுகள் காரணமாக பழுதுபார்க்கப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.7.42 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள், 294 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், தெரு விளக்குகள் மற்றும் மழை நீர் வடிகால் வசதிகளை சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கோவை நுகர்வோர் அமைப்பு, பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து முறையிட்டு வருகின்றது, மேலும் இந்த பாலம் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தும், அதை அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ரூ.115.5 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த மேம்பாலம் கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் வீடியோ கான்ஃபிரென்சிங் மூலம் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், இந்த மேம்பாலம் சர்வீஸ் ரோடு உடன் இணையும் இடத்தில் உள்ளது. சர்வீஸ் ரோட்டில் இருந்து மேம்பாலத்திற்கு இறங்கும் பகுதியில் வாகனங்கள் திடீரென வலதுபுரம் திரும்ப வேண்டிய நிலை உள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இந்த திடீர் திரும்பும் பகுதி இந்திய ரோடு காங்கிரஸ் வழிகாட்டுதல்களுக்கு முரணானது என சமூக ஆர்வலர்கள் மற்றும் சாலைப் பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.
சர்வீஸ் சாலை மேம்பாலத்துடன் இணைப்பதை தீர்க்கமாக வடிவமைக்கப்பட்டிருந்தால் இந்த பிரச்சனை ஏற்படாது. இதற்கு சிறிய அளவில் நிலம் கூடுதலாக தேவைப்படும். இந்த பிரச்சினையை சரிசெய்வதற்கு தற்போது பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது, கட்டமைப்பு திட்டங்களில் பாதுகாப்பு தரங்களும் பொறுப்புணர்வும் கடைபிடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.


Click it and Unblock the Notifications