சில நிறுவன முதலாளிகள் மட்டுமே தங்கள் ஊழியர்களை குடும்பமாக பார்ப்பார்கள். அப்படி தான் நம்ம கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு ஐடி நிறுவனத்தின் உரிமையாளர், நிறுவன லாபத்தை ஊழியர்களுக்கு போனஸாக பகிர்ந்து தந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
கோயம்புத்தூரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய ஒரு ஐடி நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு ஆண்டு சம்பளத்தில் சுமார் 50% தொகையை போனஸாக வழங்கி சிறப்பித்துள்ளது. kovai.co என்ற ஐடி நிறுவனம் கோயம்புத்தூரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது . Software as a Service (SaaS) எனப்படும் மென்பொருளை சேவையாக வழங்கி வரும் நிறுவனம் இது. இந்நிறுவனம் பிபிசி, வோடஃபோன், ஃபைசர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு எல்லாம் மென்பொருள் சேவையை வழங்குகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட சேவைகளை இந்நிறுவனம் வழங்குகிறது. தொழில் லாபமாக நடைபெறுவதை அடுத்து இதன் உரிமையாளர் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கியுள்ளார். இந்த நிறுவனம் தங்களிடம் பணியாற்றும் 140 ஊழியர்களுக்கு மொத்தமாக 14. 5 கோடி ரூபாயை போனஸாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
Together we grow என்ற திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அல்லது அதற்கு முன்பு நிறுவனத்தில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் மூன்று ஆண்டுகள் சேவை முடித்தவுடன் அவர்களின் மொத்த ஆண்டு ஊதியத்தில் சுமார் 50 சதவீத தொகையை போனஸாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஜனவரி 31 ஆம் தேதி அன்று தங்கள் மாத ஊதியத்தோடு சேர்ந்து போனஸ் தொகையையும் பெற்றுள்ளனர். நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் லாபத்திற்கும் பங்களிக்கும் ஊழியர்களுக்கு உரிய வெகுமதி அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என கூறும் கோவை.கோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சரவணகுமார் ஊழியர்களுடன் நிறுவனத்தின் லாபத்தை பகிர்ந்து கொள்வதே சிறந்தது என கூறியுள்ளார்.

முதலில் ஊழியர்களுக்கு அவர்களின் செயல் திறனையும் வேலையும் பாராட்டி நிறுவன பங்குகளில் கணிசமான சதவீதத்தை வழங்கலாம் என திட்டமிட்டு இருந்தோம் ஆனால் அவை வெறும் காகித பணமாகவே இருக்கும் ஊழியர்களுக்கு உண்மையான பலன் அளிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு பணமாகவே வழங்க வேண்டும் என தீர்மானித்தோம் என்கிறார். அந்த அடிப்படையில் தான் தற்போது போனஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது என சரவணகுமார் கூறுகிறார்.
இவ்வாறு தங்களிடம் போனஸ் பெற்ற ஊழியர்கள் அந்த பணத்தை கொண்டு வீட்டுக் கடனை அடைப்பது ,வீடு வாங்க முன்பணம் செலுத்துவது அல்லது தேவைக்கேற்ப முதலீடு என பல்வேறு வழிகளில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என அவர் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications