இந்தியாவில் புதிய தொழில்நுட்பத்தை அனைத்து தரப்பு மக்களும் வேகமாக பயன்படுத்த துவங்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையாக இருக்கும் வேளையில், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பேமெண்ட் சேவையான யூபிஐ சேவையை பிராண்டட் கடைகள், மளிகை கடைகள், பெட்டி கடைகள், தள்ளுவண்டி கடைகளை, சாலையோர வியாபாரிகள் பயன்படுத்துவதை தாண்டி...
தற்போது இந்தியாவில் முதல் முறையாக ஓடும் பேருந்தில் யூபிஐ சேவை மூலம் டிக்கெட்-க்கு பணம் செலுத்தும் சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து நிறுவனம், தங்களுடைய ஐந்து பேருந்துகளில் க்யூஆர் கோட் மூலம் இயங்கும் யூபிஐ பேமெண்ட் சேவையை அறிமுகப்படுத்தி பஸ் டிக்கெட்-க்கு பணம் செலுத்தும் முறையை கொண்டு வந்து, ஊரக போக்குவரத்து துறையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து நிறுவனமான ஜெய் சக்தி பஸ் சர்வீசஸ் நிறுவனம் கோயம்புத்தூரில் வடவள்ளி - ஒண்டிப்புதூர், கீரநத்தம் - செல்வபுரம், மதுக்கரை மார்க்கெட் - ஒண்டிப்புதூர் மற்றும் சாய்பாபா காலனி ஆகிய வழித்தடங்களில் ஐந்து பேருந்துகளை இயக்கி வருகிறது.
பஸ்-களில் டிக்கெட் வாங்கும் போது இருக்கும் பெரிய பிரச்சனை சில்லறை கொடுப்பது தான், இது பயணிகளுக்கும் பிரச்சனை, நடத்துனருக்கும் பிரச்சனை. இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் QR code வாயிலாக இயங்கும் யூபிஐ சேவையை பஸ் டிக்கெட் எடுக்க பயன்படுத்தப்பட்டு உள்ளது .
ஜெய் சக்தி பேருந்து சேவையின் மேலாளர் கே கார்த்திக்பாபு இதுக்குறித்து கூறுகையில் பல பயணிகள் டிக்கெட் கட்டணத்திற்கான சரியான சில்லறையை கொண்டு வருவது இல்லை, இது நடத்துனர்களுக்கு சிக்கலை உருவாக்கியது. இதனால் இதற்கு மாற்று திட்டத்தை கொண்டு வர முடிவு செய்தோம்.
எங்கள் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதைக் கண்காணிக்க பிரத்யேக மென்பொருளை உருவாக்கியுள்ளோம், அதாவது, பேருந்துக்குள் இருக்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து ஒரு பயணி டிக்கெட் கட்டணத்தை செலுத்தும்போது, நடத்துனர் மற்றும் மேலாளருக்கு அறிவிக்கப்பட்டு, நடத்துநர்கள் பயணிகளுக்கு காகித டிக்கெட்டுகளை வழங்குவார் இதன் மூலம் பிரச்சனை எளிதாக தீர்க்கப்பட்டு உள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ்-யிடம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications