தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில் ஆயிரக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களுக்கு மின்வெட்டு ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
கோவையில் கடந்த சில நாட்களாகவே அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புகார் கூறுகின்றன. வேலை நேரத்தில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் மூலப்பொருள் வீணாவது மற்றும் இயந்திரங்கள்-உதிரிபாகங்கள் சேதமடைந்து போவது என ஒரு இயந்திரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது என சொல்லப்படுகிறது.

உதாரணமாக 5 இயந்திரங்களை கொண்டு இயங்கும் ஒரு சிறிய நிறுவனம் குறைந்தது நாளொன்றுக்கு 10,000 ரூபாய் வரை இழப்பு சந்திக்கிறது. இதன் அடிப்படையில், கோவையில் உள்ள MSME நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 10 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு குடிசை மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்துள்ள பேட்டியில், கோவையில் சுமார் 50,000 சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் job-order அடிப்படையில் இயங்கி வருகின்றன என கூறியுள்ளார். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக ஒரு நாளைக்கு 10 முறைக்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என குறிப்பிடுகிறார்.
சில துணைமின் நிலையங்களில் 1 முதல் 2 மணி நேரம் வரை மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறும் அவர், ஏற்கனவே மின் கட்டண உயர்வு, மூலப்பொருள் விலையேற்றம், தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் போன்ற பிரச்சினைகளால் தவித்து வரும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு இந்த மின்வெட்டு ஒரு பேரிடியாக விழுந்துள்ளது என்கிறார்.
திடீரென மின் தடைபடும் போது இயந்திரங்கள் சட்டென நின்றுவிடுகின்றன, இதனால் தானியங்கி இயந்திரங்களின் உதிரிபாகங்களும், விலையுயர்ந்த கருவிகளும் சேதமடைகின்றன. உண்மையில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு சப்ளை செய்வதில் சிரமம் இருந்தால், மின்சார வாரியம் எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும் என்பதை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். இதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் இயந்திரங்கள், உதிரிபாகங்கள் மற்றும் கருவிகளை பாதுகாக்க முடியும். கோவையை இந்த மின்வெட்டுகளில் இருந்து காப்பாற்ற அரசு அவசர கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜேம்ஸ் கெட்டு கொண்டுள்ளார்.
இருகூர் பகுதியில் ஆலை நடத்தி வரும் எஸ். சிவகாளிஸ்வரன் அளித்துள்ள பேட்டியில் கடந்த மூன்று நாட்களாக தங்கள் பகுதியில் தினமும் 7 முதல் 8 முறை மின்வெட்டு ஏற்படுகிறது. திடீர் மின்தடையால் வேலை செய்யும் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு, செயலாக்கப்படும் மூலப்பொருள் வீணாகிறது. பித்தளை பாழாகும் போது அதன் செலவு மிகவும் அதிகம். பித்தளை தற்போது ஒரு கிலோ 1,000 ரூபாய்க்கும் அதிகமாக விற்கிறது. மின்தடையால் கருவிகள் உடைவது பெரும் சுமையாகிவிட்டது என்கிறார்.
சாதாரண லேத் இயந்திரங்களில் மென்மையான உதிரிபாகங்களை மாற்றுவதற்கே 4,000 ரூபாய் வரை செலவாகிறது, இது கடந்த மூன்று நாட்களில் இருமுறை நடந்துள்ளது என கூறியுள்ளார். மேலும், தான் 7 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி ஷிப்டுக்கு 1,300 ரூபாய் கூலி வழங்குவதாகவும், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் உற்பத்தி இல்லாவிட்டாலும் கூட அந்த தொழிலாளர்களுக்குரிய கூலியை தான் கட்டாயம் வழங்க வேண்டியுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.இதற்கிடையே மின் பற்றாக்குறை இல்லை என மறுத்துள்ள TNPDCL அதிகாரிகள், உள்ளூர் டிரான்ஸ்பார்மர்களில் ஏற்படும் அதிகப்படியான மின்சுமை காரணமாகவே சில நேரங்களில் இந்த தடைகள் ஏற்படுவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications


