கோவை மாநகரம் கல்வி, மருத்துவம், தொழில், ஜவுளி, மோட்டார் பம்புகள் போன்ற துறைகளில் சிறந்த வளர்ச்சியை கண்டுள்ளது. அதிலும், குறிப்பாக தொழில்துறை என்பது கோவையின் பெயரை உலகளவில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. நூற்பாலைகளுக்கு பெயர் பெற்றதால் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கோவை அழைக்கப்படுகிறது. இங்கு பல்வேறு துறைகள் நல்ல வளர்ச்சி நிலையை அடைந்துள்ளன. கோவை மற்றும் திருப்பூரை உள்ளடக்கிய கொங்கு மண்டலம் தொழில் வளர்ச்சியிலும், மாநிலத்தின் பொருளாதாரப் பங்களிப்பிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்பத் துறையில் கோவை பெரும் வளர்ச்சியை பெற்று வருகிறது. கோவையில், பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இயங்கி வருகிறது. இதனால், இங்கு ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், ஐ.டி நிறுவனங்கள் அமைவதற்கான முதலீடுகளையும் ஈர்த்து வருவதால், பிரபல ஐ.டி நிறுவனங்களின் விருப்ப இடமாகவும் கோவை மாறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு நிறுவனங்களும் கோவையில் அலுவலகத்தைத் திறந்து வருவதால், ரியல் எஸ்டேட் துறையிலும் அதிகப்படியான டிமாண்ட் உள்ளது. ஆனால், இந்த டிமாண்ட்டிற்கு ஏற்ற சப்ளை இல்லாததால், கோவை மாநகரம் முழுவதிலும் பல இடங்களில் புதிய ஐடி பார்க் கட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவை சரவணம்பட்டியில் ஏற்கனவே பல ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், ஆதித்யா டெக் பார்க் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சரவணம்பட்டியில் தற்போதைய டெக் பார்க் மையத்துக்கு எதிரே ஒரு புதிய ஐடி டவர் கட்டுவதற்காக சுற்றுச்சூழல் அனுமதி (EC) கேட்டு ஆதித்யா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
ஏற்கனவே சுமார் 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் அதித்யா டெக் பார்க் திறக்கப்பட்டுள்ள நிலையில், 4.64 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய ஐடி டவர் அமைக்க அனுமதி கோரியுள்ளது. இதன் கட்டிட அமைப்பை பொறுத்தவரை 2 அடித்தளங்கள் + தரை நிலை + 9 மாடிகள் அமையவுள்ளன. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சிகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை மாநகரம் பாரம்பரிய தொழில்துறை மையமாக அறியப்பட்டாலும், சமீப ஆண்டுகளாக ஐடி துறையில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. கோவையில் ஏராளமான பொறியியல் மற்றும் கணினி அறிவியல் பிரிவில் சிறந்து வழங்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்ளன. இதனால், நன்கு தகுதி பெற்ற பணியாளர்கள் கிடைப்பார்கள் என்பதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் கோவையில் அதிகப்படியான ஐடி நிறுவனங்களை தொடங்கி வருகின்றன.
ஐடி துறையில் சிறந்து விளங்கும் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், கோவையில் அலுவலக ரியல் எஸ்டேட் விலை, வீட்டு வாடகை மற்றும் பராமரிப்பு செலவுகள் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இது நிறுவனங்களுக்கான செலவுகளையும் பெருமளவு குறைந்து சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. மேலும், கோவையில் சர்வதேச விமான நிலையம், ரயில்வே, நெடுஞ்சாலைகள் போன்ற சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளது. விரைவில் மெட்ரோவும் வரவுள்ளது. இது ஐடி நிறுவனங்களுக்குச் சிறந்த இணைப்பை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications