தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மாவட்டத்தில் சென்னை-க்கு அடுத்தபடியாக இருப்பது கோயம்புத்தூர். கொரோனா தொற்றுக்கு பின்பு கார்ப்ரேட் நிறுவனங்கள் மத்தியில் பெரு நகரங்களை விடுத்து சிறிய நகரங்களுக்குப் படையெடுக்கும் டிரெண்ட் அதிகமானது. இந்த முக்கியமான மாற்றத்தில் அதிகம் பலன் அடைந்தது என்றால் அது கோயம்புத்தூர் தான். ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்பு, திறமையான ஊழியர்கள், குறைவான ரியல் எஸ்டேட் செலவுகள் ஆகியவற்றின் பல டெக் நிறுவனங்களை ஈர்த்துள்ளது கோயம்புத்தூர்.
இதன் வாயிலாக ரீடைல் சந்தையிலும், ரியல் எஸ்டேட் சந்தையிலும் பெரும் மாற்றத்தைக் கோயம்புத்தூர் கடந்த 5 வருடத்தில் சந்தித்து வருகிறது. நிலத்தின் விலையும், வாடகையும் அதிகளவில் உயர்வு ஒருபக்கம் இருந்தாலும் ரியல் எஸ்டேட் சந்தையில் அதிகப்படியான டிமாண்ட் உள்ளது. எந்தொரு அலுவலக கட்டிடத்தை திறந்தாலும் 3-6 மாத்திற்கு முழுமையாக ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இதனால் கோயம்புத்தூரில் பல பகுதிகளில் தற்போது அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இதேவேளையில் வீடுகளுக்கான டிமாண்ட்-ம் கோயம்புத்தூரில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது, சென்னைக்கு இணையாகக் கோவையிலும் புதிய கட்டுமானங்கள் வேகமெடுத்துள்ளது மறுக்க முடியாத உண்மை. இப்படியிருக்கையில் Rakindo Group என்னும் நிறுவனம் கோவையில் 713 ஏக்கரில் மாபெரும் டவுன்ஷிப் உருவாக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கோவை அருகே கோவைப்புதுர் பகுதியில் 713 ஏக்கர் பரப்பளவில் கலப்பு வளர்ச்சி நகரத்தை (Mixed Development Township) அமைக்க ராகிண்டோ குழுமம் திட்டமிட்டு, இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. டவுன்ஷிப் என்பது ஒரு சிறிய நகரத்தைக் குறிப்பிட்ட இடத்தில் உருவாக்கும் ரியல் எஸ்டேட் திட்டம்.
இந்த பிரமாண்ட டவுன்ஷிப் திட்டத்தில் குடியிருப்புகள், பூங்காக்கள், ஐடி பூங்கா, மால், மல்டிபிளக்ஸ், கல்லூரி, மருத்துவமனை, ரிசார்ட், ஹோட்டல், கடைகள் மற்றும் கன்வென்ஷன் ஹால் ஆகியவை இடம்பெற உள்ளன.
இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் ராகிண்டோ டெவலப்பர்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம், ராஸ் அல் கைமா அரசால் நிறுவப்பட்ட கூட்டணி கம்பெனியான ராகீன் மற்றும் துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட
ட்ரைமேக்ஸ் குழுமத்தின் கூட்டு முயற்சியாகும்.
மத்திய கிழக்கு, சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பாவில் பிரபலமான சொத்து மேம்பாட்டு மற்றும் மாஸ்டர் பிளானிங் நிறுவனமாக ராகீன் விளங்குகிறது. உலகின் முன்னணி எண்ணெய் கிணறு தோண்டும் துறையிலும், சிராமிக், கண்ணாடி, கட்டுமானம் மற்றும் உரத் தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்கும் பன்னாட்டு நிறுவனமாக ட்ரைமேக்ஸ் குழுமம் செயல்படுகிறது.
இந்த பிரமாண்ட திட்டம் கோவையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்குவதோடு, கோவை ரியல் எஸ்டேட் துறையின் முக்கிய அடையாளமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications