இந்தியாவின் பெரு நகரங்கள் எல்லாம் தலைப்பு செய்திகளில் இடம்பிடிக்க போராடி வரும் நிலையில் சத்தமே இல்லாமல் சாதனை படைத்து வருகிறது கோயம்புத்தூர். ஒரு காலத்தில் ஜவுளி உற்பத்தி நகரமாக இருந்த கோவை இன்று எம்எஸ்எம்ஈ தலைநகரமாகவும் ஐடி மற்றும் ஜிசிசி மையமாகவும் மாறி வருகிறது.
கடின உழைப்பு இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதை கோயம்புத்தூர் நகரமும் கோயம்புத்தூர் மக்களும் நிரூபித்து காட்டிவிட்டனர். கோவை கிட்டத்தட்ட 45,000 கோடிக்கும் அதிகமான உற்பத்தி திறன் கொண்ட ஒரு உற்பத்தி நகரமாக உருவெடுத்து இருக்கிறது. ஜவுளில் உற்பத்தி நகரமாக இருந்த கோயம்புத்தூர் இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் பம்புகள் உற்பத்தி மையமாகவும் கிரைண்டர் உற்பத்தி நகரமாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த அபார வளர்ச்சி பல ஆண்டு கால உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என கொள்ளலாம். கோவையில் 50,000க்கும் அதிகமான சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செயல்படுகின்றன. துல்லியமான பொறியியல் பொருட்கல் உற்பத்தியில் இந்தியாவிலேயே முக்கியமான நகரமாக மாறியுள்ளது. நாட்டிலேயே உற்பத்திக்கான சிறந்த ஒரு சூழல் கொண்ட நகரம் என்ற பெருமை கோவைக்கு கிடைத்துள்ளது.
ஒரு காலத்தில் ஜவுளி உற்பத்தி தான் கோவையின் அடையாளமாக இருந்தது அதனால் தான் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெயரே கோயம்புத்தூருக்கு கிடைத்தது. ஆனால் தற்போது பொறியியல் பொருட்கள் ,மோட்டார்கள் , பம்புகள், கம்ப்ரசர் மற்றும் பல்வேறு தொழில் தொழிற்சாலைகளுக்கு தேவையான கருவிகளை உற்பத்தி செய்து வழங்கக் கூடிய நகரமாக மாறி இருக்கிறது.

கோயம்புத்தூர் நகரின் முக்கியமான ஒரு சாதகமான அம்சமே இங்கே இருக்கக்கூடிய உற்பத்தி மற்றும் சிறு ,குறு, நடுத்தர நிறுவனங்கள் தான். இவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக நகரத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றி இருக்கின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படக்கூடிய பம்புகள் மற்றும் மோட்டார்களில் 40% கோயம்புத்தூரில் தான் உற்பத்தி ஆகிறது. இங்கே 700க்கும் அதிகமான வெட் கிரைண்டர் உற்பத்தி ஆலைகள் இருக்கின்றன. கோவை வெட் கிரைண்டருக்கு புவிசார் குறியீடு கூட இருக்கிறது.
இங்கே செயல்படும் பல்வேறு நிறுவனங்களும் இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறைகளாக தொழிலை நடத்தி வருவது மற்றொரு பெருமை. அதற்கு ஏற்ற வகையில் திறன் திறன்மிகு ஊழியர்களை வழங்கும் வகையில் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் இங்கே செயல்படுகின்றன. இந்தியாவின் மெட்ரோ நகரங்களுடன் ஒப்பிடும்போது கோவையில் ஒரு தொழிலை தொடங்கி செயல்படுத்துவதற்கான செயல்பாட்டு செலவினம் குறைவு.
10 ஆண்டுகளில் கோயம்புத்தூரில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 271 இல் இருந்து 1350 ஆக உயர்ந்து இருக்கிறது கடந்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50000 ஐடி வேலைவாய்ப்புகள் இங்கே உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் ஐடி சேவை நகரமாகவும் கோவை படிப்படியாக உருவெடுத்து வருகிறது. சென்னைக்கு அடுத்ததாக தமிழ்நாட்டின் அடையாளமாக மாறி வருகிறது கோவை.
பெரிய பெரிய யூனிகார்ன் நிறுவனங்கள் இல்லை, ஆனால் பல தலைமுறைகளாக செயல்படும் தொழில்கள் உண்டு. பணிநீக்கம் , நிறுவன மதிப்பீடு பிரச்சினைகள், திடீரென நிறுவனத்தை இழுத்து மூடுவது போன்ற எந்த டிராமாவும் இல்லாமல் தொழில் , கடின உழைப்பு ஆகியவற்றின் மூலம் கட்டமைக்கப்பட்டு உறுதியாக வளர்ந்து நிற்கிறது கோவை.


Click it and Unblock the Notifications