கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான CoinDCX-ல் அடுத்தடுத்து தலைமை பதவிகளில் இருப்பவர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். இந்நிறுவன தலைமை மனிதவள அதிகாரி (CHRO) முதிதா சவுகான் மற்றும் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி (CISO) ஸ்ரீதர் ஜி ஆகியோர் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் இந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) விவேக் குப்தா மற்றும் சட்டப் பிரிவு தலைவர் துஷார் தருண் ஆகியோர் நிறுவனத்தை விட்டு வெளியேறினர். தற்போது மேலும் இருவர் பதவி ராஜினாமா செய்துள்ளனர். CoinDCX உலக அளவில் தனது செயல்பாடுகளை விரிவாக்க திட்டமிட்டுள்ள நிலையில், இந்த ராஜினாமா அறிவிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

CoinDCX இணை நிறுவனர் மற்றும் CEO சுமித் குப்தா, X சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், “ஐந்து ஆண்டுகள் CoinDCX-ல் சிறப்பான பங்களிப்பை வழங்கிய முதிதா சவுகான், புதிய வாய்ப்புகளைத் தேடி வெளியேற முடிவெடுத்துள்ளார். ஸ்ரீதர் ஜி, மூன்று வருடப் பணிக்குப் பிறகு, தனது வலுவான பங்களிப்புகளுடன் எங்களிடமிருந்து விடைபெறுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இணை நிறுவனர் நீரஜ் கண்டேல்வால் மற்றும் நான் இருவரும் அவர்களுடன் இணைந்து பணியாற்றியதை உண்மையாகவே விரும்பினோம். அவர்கள் அமைப்புகளையும் செயல்முறைகளையும் உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், உறுதியையும் நம்பிக்கையையும் வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றினர். அவர்கள் செய்த பங்களிப்புகளுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவர்களின் அடுத்த தொழில் முயற்சிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று சுமித் குப்தா தெரிவித்துள்ளார்.
புதிய தலைவர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், சுமூகமான மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாகவும் குப்தா கூறியுள்லார். ஜூலை மாதம், CoinDCX தனது உள் செயல்பாட்டு கணக்குகளில் சைபர் தாக்குதலை எதிர்கொண்டது. இதில் சுமார் $44.2 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.
அப்போது குப்தா, வாடிக்கையாளர்களின் நிதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அவர்களின் முக்கிய சொத்துகள் பாதுகாப்பான கோல்ட் வாலட் கட்டமைப்பில் உள்ளன என்றும் உறுதிப்படுத்தினார். மேலும், அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் மற்றும் INR திரும்பப் பெறுதல்களும் முழுமையாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
வணிக ரீதியாக, CoinDCX தனது மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க (MENA) பிராந்திய விரிவாக்க உத்தியின் ஒரு பகுதியாக பஹ்ரைனில் BitOasis என்ற மெய்நிகர் டிஜிட்டல் சொத்து வர்த்தக தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 2026-க்குள் தனது வருவாயில் 30 சதவீதத்தை இந்த பிராந்தியத்திலிருந்து ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. CoinDCX 15 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் 2024-ல் BitOasis-ஐ கையகப்படுத்தியது.


Click it and Unblock the Notifications