டெல்லி: இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா நிகழ்வு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளை சேர்ந்த பலரும் இந்த கும்பமேளாவில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை குறித்த ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக இந்தியாவில் அதிக அளவில் மகா கும்பமேளா நிகழ்ச்சியும் , பிரிட்டனை சேர்ந்த இசைக்குழுவான கோல்ட் பிளே மும்பை மற்றும் அகமதாபாத்தில் நடத்திய இசை கச்சேரி குறித்தும் தான் அதிக அளவில் மக்கள் தேடி இருக்கிறார்கள். கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி வரையிலான மூன்று மாதங்களிலும் அதிக அளவில் மக்களால் தேடப்பட்ட தகவல் குறித்து பிக்சல் என்ற எக்ஸ் பக்கத்தில் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் கோல்ட் பிலே பற்றி அதிகமாகவும், மகா கும்பமேளா பற்றி அதிகமாகவும் தேடி உள்ளனர் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி கடந்த 90 நாட்களில் பீகார் மாநிலத்திலிருந்து தான் கும்பமேளா குறித்து அதிக அளவில் தேடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அடுத்ததக மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கோல்ட் பிளே இசை நிகழ்ச்சி குறித்து அதிக அளவில் கூகுளில் தேடி இருக்கின்றனர்.
மத்திய பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கும்பமேளா நிகழ்வு குறித்து ஏராளமானவர்கள் கூகுளில் விவரங்களை தேடி இருக்கின்றனர். மணிப்பூர், மிசோரம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் கோல்ட் பிளே இசைநிகழ்ச்சி குறித்து அதிகம் தேடியுள்ளனர். தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகியவற்றில் கோல்ட்பிளே இசைக்குழு குறித்து தான் அதிக அளவில் தேடியுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் மகா கும்பமேளா குறித்த தேடுதல்கள் தான் அதிகமாக இருந்திருக்கிறது. கோவா மாநிலத்தில் இந்த இரண்டு நிகழ்வுகளை குறித்தும் எந்த ஒரு தேடுதலிலும் யாரும் ஈடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த பதிவு எக்ஸ் வலைத்தளத்தில் லட்சக்கணக்கான பயனர்களின் பார்வைகளை பெற்றுள்ளது.
நவம்பர் மாதத்தில் பலரும் கோல்ட் பிளே இசை நிகழ்ச்சி குறித்து தேடியுள்ளனர், அதுவே டிசம்பர், ஜனவரி மாதத்தில் பலரது கும்பமேளா நிகழ்ச்சியை குறித்து தேடுதல்கள் அதிகமாகியுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சி உலகளவில் மிகப்பெரிய மத ரீதியான நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. தினமும் 1 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications