தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று விஜயின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருந்தாலும் ஆட்சி அமைப்பதற்கு தவேகவிற்கு 118 எம்எல்ஏக்கள் தேவை. இந்த சூழலில் தான் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியை உடைத்துக் கொண்டு தவெகவுடன் கை கோர்த்துள்ளது.
கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்திருக்கிறது. தேர்தலுக்கு முன்னதாகவே காங்கிரஸில் ராகுல் காந்தி தரப்பி திமுக கூட்டணி வேண்டாம், தவெகவுடன் செல்லலாம் என கூறியதாக சொல்லப்பட்டது. இருந்தாலும் சோனியா காந்தி திமுக உடனே செல்ல வேண்டும் என முடிவெடுத்ததால் ராகுல் தன் முடிவில் பின் வாங்கினார் என தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் தேர்தலில் திமுக தோல்வி அடைந்து தவெக வென்ற நிலையில் காங்கிரஸ் இப்போது தவெக பக்கம் சாய்ந்துவிட்டது. இது தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமைய காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது. இந்த ஆதரவுடன் குறிப்பிட சில நிபந்தனைகளையும் விதித்திருக்கிறது. காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் விஜய், தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்குமாறு இந்திய தேசிய காங்கிரஸிடம் (INC) முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியும் (CLP), ஆட்சி அமைப்பதற்கு TVK-க்கு தங்களின் முழு ஆதரவையும் வழங்க முடிவு செய்துள்ளன என கூறியுள்ளார்.

இந்திய அரசியலமைப்பை நம்பாத எந்தவொரு மதவாத சக்திகளையும் இந்தக் கூட்டணியிலிருந்து த.வெ.க. விலக்கி வைத்தால் மட்டுமே எங்கள் ஆதரவு என கூறியுள்ள அவர், இந்தக் கூட்டணி, இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு மட்டுமல்லாமல், உள்ளாட்சி அமைப்புகள், மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான எதிர்காலத் தேர்தல்களுக்கும் பொருந்தும் என கூறியுள்ளார்.
இதன் மூலம் திமுக உடனான 20 ஆண்டுகால கூட்டணியை காங்கிரஸ் முறித்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்டு 5இல் வென்று, தற்போது தவெக அணிக்கு தாவியுள்ளது. தற்போது தவெகவிற்கு 108 இடங்கள் உள்ளன, இதில் ஒரு இடத்தை விஜய் ராஜினாமா செய்துவிடுவார். ஒருவர் சபாநாயகர் ஆகிவிடுவார். எனவே தவெகவிடம் பெரும்பான்மை நிரூபிக்க 106 இடங்களே உள்ளன. தற்போது காங்கிரஸின் 5 இடங்கள் கிடைத்து 111ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 7 இடங்கள் தவெகவிற்கு தேவை.
முன்னதாக அதிமுகவில் பிளவு ஏற்படுவதாகவும் சிவி சண்முகம் தலைமையில் 40க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் பிரிந்து விஜயுடன் இணைந்து ஆட்சி அமைக்க ஆதரவு தர முன்வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் இன்று நடக்க இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி ரத்து செய்துள்ளார். செங்கோட்டையனும் சில அதிமுக எம்.எல்.ஏக்களிடம் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. விஜய் சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கும் வரை தமிழக அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருப்பது உறுதி.


Click it and Unblock the Notifications

