சென்னை: கடந்த சில வாரங்களுக்கு முன்பு மத்திய அரசின், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) மூலம் முன்னணி மசாலா பிராண்டுகளான MDH மற்றும் எவரெஸ்ட் (Everest) மசாலா ஆகியவற்றில் அதிக அளவு பூச்சிக்கொல்லியான
எத்திலீன் ஆக்சைடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சரியான நடவடிக்கை எடுக்குமாறு அந்நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டது. இந்திய ஸ்பைஸ் போர்டு, தற்போது இந்த நிறுவனங்களின் மசாலாப் பொருட்களின் மாதிரிகளை வைத்து ஆய்வு செய்து வருகிறது.
MDH மற்றும் எவரெஸ்ட் (Everest) மசாலா பிராண்டுகளின் பாதுகாப்பு குறித்த அச்சங்களை மக்கள் தங்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். இதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் விதமாக லோக்கல் சர்க்கிள்ஸ், இந்தியாவில் உள்ள 366 மாவட்டங்களில் 27,000திற்கும் மேற்பட்ட மக்கள் பங்களிக்கும் வகையில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.

அந்தக் கணக்கெடுப்பில், மூன்றில் 1 குடும்பம், அதாவது 36 சதவிகித குடும்பங்கள் எதிர்காலத்தில் MDH மற்றும் எவரெஸ்ட் மசாலாப் பொருட்களை வாங்குவதை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் 17 சதவிகிதத்தினர் பாதுகாப்புக் கவலைகள் இருந்தபோதிலும் தொடர்ந்து வாங்க விரும்புவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
அதேபோல, கூடுதலாக 58 சதவீத வாடிக்கையாளர்கள் இதுபோன்ற பிராண்டுகளில் எடுக்கப்பட்ட FSSAI நடவடிக்கை குறித்து நம்பிக்கை இல்லாமல் இருப்பதாகவும், 28 சதவீத மக்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிந்திருக்கவில்லை என்றும் ஒப்புக்கொண்டுள்ளனர். அதேபோல் ஒரு சில இந்திய மாநிலங்களில் உள்ள உணவு உற்பத்தி செய்யும் இடங்களில் மட்டுமே தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்த மசாலாப் பொருட்களின் விளைவுகள், இந்தியாவின் எல்லைகளுக்கு அப்பால் நீட்டிக்கப்பட்டுள்ளன. நேபாளம், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய பகுதிகளில் MDH மற்றும் எவரெஸ்ட் விநியோகித்த சில மசாலாப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமும் (FDA) இந்த பிரபலமான பிராண்டுகளின் தயாரிப்புகளில் பூச்சிக்கொல்லி இருப்பதைப் பற்றி ஆய்வு செய்ய இறங்கியுள்ளது என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

அதேபோல இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் மிளகாய் மற்றும் மிளகுத்தூள் மாதிரிகளில் புற்றுநோயை உருவாக்கும் பொருள்கள் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) கவலை தெரிவித்துள்ளது. MDH மற்றும் எவரெஸ்ட் ஆகியவை தங்கள் தயாரிப்புகள் பாதுகாப்பானவை என்று உறுதியளித்த போதிலும், மாலத்தீவு, பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பிற இந்திய பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் உள்ள உணவு அதிகாரிகள், இந்த பொருட்களை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில் ஹாங்காங்கில் உள்ள உணவு பாதுகாப்பு மையம் MDH மற்றும் எவரெஸ்ட் தயாரிப்புகளின் மாதிரிகளில் எத்திலீன் ஆக்சைடு இருப்பதாகக் கண்டறிந்தது. அதன்படி MDH தயாரிப்புகளான, மெட்ராஸ் கறி பவுடர், சாம்பார் மசாலா பவுடர், கறி பவுடர், போன்ற தயாரிப்புகளிலும், எவரெஸ்ட் தயாரிப்பான ஃபிஷ் கறி மசாலா ஆகியவற்றிலும் எத்திலின் ஆக்சைடு இருப்பதாகக் கண்டறியப்பட்டது.
இந்தியாவில் உணவு பாதுகாப்பில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும் வரை உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து வாடிக்கையாளர்கள் தொடர்ந்து சந்தேகிக்க நேரிடும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications