டெல்லி: கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து உலகம் முழுவதும் பெரிய அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது கொரோனா வைரஸ். சீனாவில் தோன்றி மக்களுக்கு பரவிய கொரோனா வைரஸ் பின்னர் உலகம் முழுவதும் பரவி அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்தது.
மீண்டும் கொரோனா: இந்தியாவிலும் கொரோனா வைரஸ் முதலில் கேரளாவில் பரவ தொடங்கி நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் இறப்புக்கு காரணமாக அமைந்தது. உலக வரலாற்றிலேயே மறக்க முடியாத ஒரு விஷயமாக இந்த கொரோனா பெருந் தொற்று மாறியது. பின்னர் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு நோய் பரவல் படிப்படியாக குறைந்தது. இந்த சூழலில் கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவிய வண்ணம் இருக்கிறது.

109 பேர் இறப்பு: ஜூன் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்து இருக்கிறது. இந்தியா முழுவதும் மொத்தம் 109 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றனர். இவர்களில் ஏழு பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் .இந்தியாவிலேயே அதிகபட்சமாக கேரள மாநிலத்திலும் மகாராஷ்டிராவிலும் தான் கொரோனா வைரஸால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் பாதிப்பு அதிகம்: கேரளாவில் 35 பேரும் மகாராஷ்டிராவில் 29 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த உயிரிழந்துள்ளனர். தொற்று அதிகரிக்கும் விகிதம் குஜராத், டெல்லி , கேரளா ஆகிய மாநிலங்களில் அதிகமாக இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி நாட்டில் 6,836 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் 14,772 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
யார் மத்தியில் இறப்பு அதிகரிப்பு: கொரோனா இறப்பு அதிகரிப்பது தொடர்பான ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அரசு அதிகாரிகள் அளித்துள்ள பேட்டியில் , "கடந்த சில வாரங்களாக இந்தியாவில் தொற்று எண்ணிக்கை சற்றே அதிகரித்திருக்கிறது நாடு முழுவதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்பவர்களின் விகிதம் ஆகியவற்றை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்" என தெரிவித்திருக்கின்றனர். பெரும்பாலான கொரோனா இறப்புகள் கொரோனாவுடன் நேரடி தொடர்பில்லாத சில நாள்பட்ட அல்லது கடுமையான உடல்நல பிரச்சனைகளை கொண்டவர்களுக்கே ஏற்பட்டிருக்கிறது என கூறியுள்ளனர் . ஆனால் அவர்கள் கொரோனாவால் அனுமதிக்கப்பட்டு உயிரிழப்பதால் அது கொரோனா இறப்பாக ஆவணப்படுத்தப்படுகிறது என கூறுகின்றனர்.
முன்னெச்சரிக்கை கட்டாயம்: பொதுமக்கள் கொரோனா பரவல் மற்றும் கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் குறித்து கவலை கொள்ள தேவை இல்லை என்றும் இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு ஆளானவர்கள் உயிரிழப்பது என்பது ஒரு சதவீதத்திற்கும் கீழ் தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளனர். இருந்தாலும் மக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக நாள்பட்ட உடல்நல பிரச்சினைகளை கொண்டிருப்பவர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications