உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், 16 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே பலி எண்ணிக்கையும் 95,731 ஆக அதிகரித்துள்ளது.
இப்படி உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தினை பரப்பி கொரோனா மனிதர்களை மட்டும் அல்ல, உலக பொருளாதாரத்தினையும் எடுத்துக் கொண்டிருக்கிறது.
இப்படி ஒரு நிலையில் தான் கொரோனா தாக்கத்தினால் வளரும் நாடுகள் அதிகமாக பாதிக்கப்படலாம். அவர்களை காப்பாற்ற அவசர உதவி தேவை என்றும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
குறைந்த ரிஸ்கில் நிறைந்த லாபம் கொடுக்கும் லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்!

மோசமான வீழ்ச்சி
2019 டிசம்பரில் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. ஆக இது உலக பொருளாதாரத்திலேயே மிகப்பெரிய மாற்றத்தினை கொண்டு வரும் என்றும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. அது மட்டும் அல்ல 1930க்கு பின்னர், உலகம் இப்படி ஒரு நீண்ட மோசமான வீழ்ச்சியை சந்திக்க போகிறது என்றும் எச்சரித்துள்ளது.

தனி நபர் வருமானம் குறையும்
வரவிருக்கும் வாரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதன் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா, கடந்த வியாழக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதிலும் உலகம் முழுக்க உள்ள 170 நாடுகள் தங்களது தனி மனித வருமானம் குறையக்கூடும். இதனால் அவை பெரிய விளைவுகளை சந்திக்கக் கூடும் என்று எச்சரித்துள்ளார்.

மக்களை பெருமளவில் பாதித்துள்ளது
கொரோனா பெருந்தொற்று மக்களின் பொருளாதாரத்தினை பெரும் அளவில் சீர்குலைத்துள்ளது. மேலும் இந்த கொடிய வைரஸ் துன்பகரமான உயிரிழப்பினையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும், அதனை கட்டுப்படுத்துவதற்கு உலகளாவிய லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது பல பில்லியன் கணக்கான மக்களை பாதித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு மிக சாதாரணமாக இருந்த இயல்பு வாழ்க்கை, இன்று மிக பேராபத்தாக மாறியுள்ளது.

தலைகீழ் மாற்றம்
இந்த நெருக்கடி நேரத்தில், உலக வளர்ச்சி மிக மோசமான நிலையில் சென்று கொண்டு இருக்கிறது. ஆக இது 2020ல் வளர்ச்சி வெகுவாக குறைய வழிவகுக்கும். மூன்று மாதங்களுக்கு முன்பு 2020ம் ஆண்டில் எங்கள் உறுப்பு நாடுகளில் 160க்கும் மேற்பட்டவற்றில் நாங்கள் தனி நபர் வருமான வளர்ச்சியினை எதிர்பார்த்தோம். ஆனால் இன்று அந்த எண்ணிக்கை தலைகீழாக மாறியுள்ளது. சரியாக சொல்லவேண்டுமானால் 170 நாடுகளில் தனி நபர் வருமானம் குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஜார்ஜீவா கூறியுள்ளார்.

நீடித்த உலகளாவிய வீழ்ச்சி
1929 முதல் 10 ஆண்டுகள் நீடித்த உலகளாவிய பெரும் பொருளாதார வீழ்ச்சியாகும். அப்போது நியூயார்க் பங்கு சந்தையில் மில்லியன் கணக்கான முதலீட்டாளர்களின் செல்வத்தினை இது அழித்தது. இந்த நிலையில் உலகம் முழுக்க வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், உலகப் பொருளாதாரம் கணிசமான பாதிப்பினை ஏற்படுத்தும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கூறியுள்ளார்.

அதிகளவில் பாதிக்கப்படும் துறைகள்
உலகம் முழுக்க பரவி வரும் கொரோனாவால் குறிப்பாக சில்லறை வர்த்தகம், விருந்தோம்பல் வணிகம், போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறை பெரிதும் பாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிறைய நாடுகளில் அதிகளவிலான ஊழியர்கள், சிறு தொழில் செய்வார்கள், சிறு குறு மற்றும் நடுத்தர ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்படலாம் என்றும் ஜார்ஜீவா கூறியுள்ளார்.

உதவி தேவை
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்காக, பல நாடுகளின் அரசுகள் 8 லட்சம் கோடி டாலருக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. கொரோனாவால் வளர்ந்து வரும் நாடுகள் அதிகபட்ச சேதத்தை சந்திக்கக்கூடும். இந்த நாடுகள் மீள்வதற்கு பல ஆயிரம் கோடி டாலர்கள் வெளிநாடுகளிலிருந்து உதவி தேவைப்படும் என்று ஜார்ஜீவா எச்சரித்துள்ளார்.

வளரும் நாடுகளுக்கு பாதிப்பு அதிகம்
உலகம் முழுக்க ஏற்ற தாழ்வு இல்லாமல் அனைத்து நாடுகளையும் பாகுபாடு இல்லாமல் கொரோனாவால் பல தரப்பு நாடுகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனினும் இதில் வளர்ந்து வரும் நாடுகளான ஆப்ரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார வசதிகள் வலுவின்றி இருப்பதால் இப்பகுதிகளில் வாழும் மக்கள் அதிக அபாயத்தை எதிர்கொள்ளக் கூடும் என்றும் ஐஎம்எஃப் எச்சரித்துள்ளது.