வங்கி அல்லாத நிதி நிறுவனமான சுந்தரம் பைனான்ஸ் மற்றும் டிவிஎஸ் குழும நிறுவனங்கள் இணைந்து, 8 கோடி ரூபாய் கொரோனா நிவாரணம் நிதியாக வழங்கியுள்ளது.
இது பிரேக்ஸ் இந்தியா, வீல்ஸ் இந்தியா, சுந்தரம் ஹோம் பைனான்ஸ் மற்றும் ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் சேர்ந்து இந்த நிவாரணத் தொகையை வழங்கியுள்ளன.
கொரோனா உதவி
மேற்கண்ட இந்த நிவாரணத் தொகையில் மத்திய அரசின் பிஎம் கேருக்கு 2.50 கோடி ரூபாயும், தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு 2.50 கோடி ரூபாயும், இது தவிர மூன்று கோடி ரூபாய் நிதியினை ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரங்களுக்காகவும் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைப்பு
வீல்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீவத் ராம், எட்டு கோடி ரூபாய்க்கான காசோலையை, தமிழக முதல்வர் எம் கே ஸ்டாலினிடம் சனிக்கிழமையன்று ஒப்படைத்துள்ளார். இது கொரோனா காலத்தில் மக்கள் தவித்து வரும் நிலையில், இது போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவி, மிகப்பெரியளவில் மக்களை பாதுகாக்க மிகப்பெரிய அளவில் உதவும்.
ரூ.40 கோடி மதிப்பிலான உதவிகள்
சமீபத்தில் டிவிஎஸ் குழும நிறுவனம் 40 கோடி ரூபாய்க்கான உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்தது. இந்த நிலையில் பல கொரோனா மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் என சப்ளை செய்ய உள்ளதாகவும் அறிவித்தது. இது தவிர தமிழ்நாடு கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசத்தில் உள்ள அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு, ஒரு நாளைக்கு 20,000ம் உணவு பொட்டலங்களை வழங்கவுள்ளதாகவும் சமீபத்திய அறிவிப்பில் கூறியது.
ஆம்புலன்ஸ் சேவை
இது தவிர உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து இரண்டு ஆம்புலன்ஸ்களையும் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது லேசான கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க கூடிய அம்சங்களுடன் உடையது என்றும், இது ஓசூர் மற்றும் மைசூரில் அதன் தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ள கிராமங்களுக்கு சேவையை வழங்கி வருவதாகவும் கூறியது.
முதல் கட்ட பரவலின் போதும் உதவி
கடந்த 100 வருடங்களாக தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து வரும் டிவிஎஸ் குழுமம், தொடர்ந்து அதை செய்யும் என்றும் ஸ்ரீனிவாசன் கூறியிருந்தார். இந்த நிலையில் அதனை நிரூபிக்கும் விதமாக 8 கோடி ரூபாய்க்கான நிதியினை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு முதல் கட்ட பரவலின்போதும், கொரோனா பரவலுக்கு மத்தியில் 30 கோடி ரூபாய் மதிப்பிலான உதவி தொகையை டிவிஎஸ் அறிவித்திருந்தது நினைவுகூறத்தக்கது.


Click it and Unblock the Notifications