கொச்சின்: சீனாவின் வுகான் மாகாணத்தை சுற்றி வளைத்துள்ள கொரோனாவின் தாக்கம், இன்று உலகம் முழுக்க பரவ ஆரம்பித்துள்ளது.
சொல்லப்போனால் சுமார் 1,490 பேருக்கு மேல் பலி கொண்டும் இன்னும் அதன் ஆத்திரம் அடங்கவில்லை. அந்தளவுக்கு நாளுக்கு நாள் உயிர் பலியும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தாக்கமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் முதன் முதலாக இந்த வைரஸ் இறைச்சியிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று கூறப்பட்டது. இதனால் சீனா அசைவ உணவு பிரியர்கள், அசைவ உணவுகளுக்கு குட்பை சொல்லி, நம்மூர் சரவணபவன் போல் சைவ உணவுகளுக்கு பலர் மாறியுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஏற்றுமதியில் எந்த தாக்கமும் இல்லை
இந்த நிலையில் சீனாவின் வுகான் மாகாணத்தில் நிலை கொண்டுள்ள இந்த வைரஸ், சீனாவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் கடல் உணவு ஏற்றுமதியில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை என்று கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் இறாலின் தேவை மட்டும் குறையலாம், இதனால் இறால் ஏற்றுமதி சற்று பாதிக்கப்படலாம் என்றும், இது இறால் ஏற்றுமதியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்றுமதி அதிகரிப்பு
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டில் சீனாவுக்கான கடல் உணவு ஏற்றுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் கடந்த ஏப்ரல் - டிசம்பர் 2019 வரையிலான காலத்தில் மொத்த ஏற்றுமதி 2,42,218 டன்னாகும். இதன் மதிப்பு 1032 மில்லியன் டாலராகும். இதே காலம் முந்தைய ஆண்டில் 1,65,950 டன் கடல் உணவு ஏற்றுமதியும், இதன் மதிப்பு 589 மில்லியன் டாலருக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது என்று MPEDA தலைவர் கே.எஸ் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு ஏற்றுமதியாளர்களா?
மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தின் கீழ் MPEDA செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடல் பொருட்கள் ஏற்றுமதி பொருட்கள் அளவு அடிப்படையில் 46%மும், இதே இதன் மதிப்பு 75% அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் இருந்து சுமார் 500 ஏற்றுமதியாளர்கள் சீனாவிற்கு கடல் உணவினை ஏற்றுமதி செய்து வருவதாகவும் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
இதுவரை பாதிப்பு இல்லை
மேலும் ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்கள் இதுவரை கொரோனாவால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தெரிவிக்கவில்லை. இருப்பினும் இறால் நுகர்வு மட்டும் குறையலாம் எனவும், இதனால் இறால் ஏற்றுமதி மட்டும் குறையலாம் என்பதால், அவர்கள் சீனாவுக்கு அனுப்புவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
வலுவான வாய்ப்புகள் உள்ளது?
எனினும் தற்போது சீனாவில் நிலவி வரும் பதற்றமான நிலையில் சீனா நுகர்வோர் ஆரோக்கியமான கடல் உணவு விருப்பங்களுக்கு மாறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இது பல்வேறு வகையான ஊர்வன போன்ற பிற பொருட்களை விட்டு செல்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறந்த இறால் ஏற்றுமதியாளர்
இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மீன்வளர்ப்பு உற்பத்தியாளராகவும், அமெரிக்காவுக்கு இறால் ஏற்றுமதி செய்யும் நாடுகளாகவும் உள்ளது. மேலும் ஐரோப்பா மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் பிற சந்தைகளுக்கும் குறிப்பிடத்தக்க அளவில் இறால்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications