ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா தனது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாடுகளும் இதே நாளில் தான் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன. அவை எந்தெந்த நாடுகள் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
தென்கொரியா: தென்கொரியாவிற்கும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் சுதந்திர தினம். 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜப்பானின் ஆட்சியில் இருந்து கொரியா பிராந்தியம் விடுதலை பெற்றது. இந்த நாளை தென்கொரியா மக்கள் 'Restoration of Light Day,' என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். அதாவது ஜப்பானின் ஆதிக்கம் முடிவுக்கு வந்து தென்கொரியாவின் இறையாண்மை நிலை நிறுத்தப்பட்ட நாள் என அந்நாட்டு மக்கள் இதனை கொண்டாடுகின்றனர். இந்த நாளில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும், அணிவகுப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இந்த நாள் தென்கொரியாவில் தேசிய விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

வடகொரியா: தென்கொரியாவை போலவே வடகொரியாவுக்கும் இந்த நாள் விடுதலை நாள். ஜப்பான் ஆதிக்கத்திலிருந்து கொரிய பிராந்தியம் விடுவிக்கப்பட்ட நாளை தான் வடகொரியாவும் கொண்டாடுகிறது. இந்த நாளில் வடகொரியாவில் பல்வேறு பொது நிகழ்ச்சிகள் நடைபெறும். ராணுவ அணி வகுப்புகளையும் இந்த நாளில் காணலாம்.
காங்கோ : 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் காங்கோ நாடு பிரான்சிடமிருந்து விடுதலை பெற்றது. இந்த நாளில் காங்கோவில் பல்வேறு அணிவகுப்புகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகின்றன. கிட்டதட்ட 80 ஆண்டுகளாக பிரான்சின் ஆதிக்கத்தில் இருந்து காங்கோ விடுதலை பெற்ற தினம் இது.
லீச்டென்ஸ்டீன்: இந்த நாட்டின் தேசிய தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆகும். இந்த நாட்டை பொறுத்தவரை இது சுதந்திர தினம் இல்லை என்றாலும் இந்த நாளை தேசிய தினமாகக் கொண்டாடுகிறது. அதாவது தங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் அடையாளத்தை கொண்டாட கூடிய வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதியை தேசிய தினமாக அனுசரிக்கிறது. இந்த நாளில் பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பஹ்ரைன்: 1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரிட்டனிடம் இருந்து பஹ்ரைன் விடுதலை பெற்றது. 1931 ஆம் ஆண்டு எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளில் பஹ்ரைனும் ஒன்று. அப்போது பிரிட்டன் ஆட்சியாளர்களுக்கும் பஹ்ரைன் ஆட்சியாளர்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி பிரிட்டன் பஹ்ரைனை ஆட்சி செய்து வந்தது. பின்னர் 1971 ஆம் ஆண்டு முறைப்படி பிரிட்டன் பஹ்ரைனுக்கு விடுதலை அடைத்தது. எனவே இந்த நாளை விடுதலை நாளாக கொண்டாடி வருகிறது.
ஜப்பான்: ஜப்பான் பொறுத்த வரை ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கிடையாது. ஆனால் ஜப்பான் நாட்டு வரலாற்றில் முக்கியமான நாள் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆகும். ஏனெனில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜப்பான் பேரரசர் இரண்டாம் உலகப்போரில் தாங்கள் சரணடைவதாக அறிவிப்பு வெளியிட்டார். இதன் மூலம் தான் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. எனவே இந்த நாளை ஜப்பான் மக்கள் End of the War Memorial Day என்ற பெயரில் அனுசரிக்கின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications