அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் இன்னும் ஓயாத நிலையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்குமா? அல்லது குறையுமா? என்ற பதற்றத்திலேயே உலக நாடுகள் இருக்கின்றன. எண்ணெய் விலை அதிகரித்தால் அது சாமானியர்களின் பாக்கெட்டை பதம் பார்க்கும் என்ற பயம் வாகன ஓட்டிகளை வாட்டி வதைக்கிறது. ஆனால் இதற்கு குஜராத் மாநிலம் ஒரு அருமையான ஐடியாவை கண்டுபிடித்துள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எரிபொருளில் பெரும்பங்கு வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படி இருக்கையில் அதற்கு உள்நாட்டிலேயே தீர்வு கிடைத்தால்.. உலகளவில் எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் எரிபொருள் தட்டுப்பாட்டை வெகுவாகக் குறைக்க முடியும்.

பயோ சிஎன்ஜி நிலையத்தில் என்ன விற்கப்படுகிறது?: ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி மாட்டு சாணத்திலிருந்து முதலில் மீத்தேன் பிரித்தெடுக்கப்படும். அதன் பிறகு மீத்தேன் மூலம் தயாரிக்கப்படும் பயோ சிஎன்ஜி எனப்படும் கம்ப்ரஸ்டு நேச்சுரல் கேஸ்-ஐ வாகன ஓட்டிகளுக்கு விற்பனை செய்கின்றனர். இதன் ஒரு கிலோ விலை 80 ரூபாய் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் விலையை விட 20 ரூபாய் குறைவு. சுமார் 16 கிராமங்களில் இருந்து 880 டன் மாட்டு சாணம் தினசரி அடிப்படையில் இந்த பயோ சிஎன்ஜி நிலையத்தை வந்தடைகிறது. அதற்காக விவசாயிகளும் தங்கள் வீட்டில் வளர்க்கப்படும் மாடுகளிடம் இருந்து 1 கிலோ மாட்டு சாணத்தை 1 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்கிறார்கள்.
தொடர்ந்து நீடிக்கும் போர் பதற்றம் காரணமாக இந்தியா எரிபொருளுக்காக வேறு சில விஷயங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஏற்கனவே நகராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் விவசாய கழிவுகளில் இருந்து பயோ சிஎன்ஜி கேஸ் தயாரிக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன.
பனாஸ் டைரி என்ற நிறுவனம் குஜராத் மாநிலத்தில் இருக்கும் சிறிய கிராமங்களில் இருந்து பால் மற்றும் மாட்டு சாணத்தை பெறுகிறது. அதேநேரம் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் பயோ கேஸ் தயாரிப்பதில் பெரும் முதலீடுகளை செய்து வருகிறது. குஜராத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் விவசாயிகள் தற்போது மாட்டு சாணத்தை விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் லாபத்தை பார்த்து வருகின்றனர்.
இன்னும் சில விவசாயிகள் தங்களிடம் இருக்கும் சிஎன்ஜி கார்களுக்கு எரிபொருளாக இந்த பெட்ரோல் நிலையத்தில் வழங்கப்படும் எரிபொருளயே பயன்படுத்தி வருகின்றனர். முதலில் மாட்டு சாணத்தில் இருந்து எடுக்கப்படும் மீத்தேன் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. மீதமிருக்கும் கழிவுகள் கனிம உரமாக மாற்றப்பட்டு அருகில் இருக்கும் விவசாயிகளுக்கே விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில ஆண்டுகளாக யூரியா போன்ற உரத்தை பயன்படுத்தி வந்த நிலையில் மண்வளத்தை மீண்டும் மீட்டெடுக்க இந்த உரம் உதவி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சிக்கல்கள் என்ன?: இந்த திட்டம் சிறப்பானதாக தோன்றினாலும் இதை நடைமுறைப்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவில் ஒட்டுமொத்த கேஸ் தேவையில் கிட்டத்தட்ட 50% வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது கிடைக்கும் பயோ கேஸ் அளவு மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதனால் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தை முழுவதுமாக செயல்படுத்த வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
கிராமப்புறங்களில் இருந்து சாணத்தை சேகரித்து, அதை ஆலைக்கு கொண்டு வருவதே பிரச்சனையாக இருக்கிறது. அதற்கு உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். எனவே இந்த ஆலைகள் இன்னும் வெற்றிகரமாக இயங்க இன்னும் பல ஆண்டுகள் எடுக்கும். இருந்தாலும் இந்தியாவின் எரிசக்தி துறைக்கு இந்த திட்டம் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications
