சிம்லா: உருளைக்கிழங்கிலிருந்து எத்தனால் தயாரிப்பதற்கான சோதனைகளை இந்தியா தொடங்கியுள்ளது. மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு நிறுவனம் (Central Potato Research Institute) இதற்கான முதல் கட்ட சோதனையில் இறங்கி இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
உருளைக்கிழங்கு கழிவுகளைக் கொண்டு எப்படி எத்தனால் தயாரிப்பது என்பது குறித்து ஆரம்பகட்ட சோதனை தற்போது நடத்தப்பட்டு வருகிறது. உலகிலேயே உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் இரண்டாவது மிகப்பெரிய நாடு இந்தியா. இங்கே உருளைக்கிழங்கு அறுவடைக்கு பின்னர் வீணாவது அதிகமாக இருக்கிறது.

எனவே இதனை பயனுள்ள வகையில் மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு நிறுவனமான சிபிஆர் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் போன்ற உருளைக்கிழங்கு அதிகமாக சாகுபடி செய்யப்படும் மாநிலங்களில் உருளைக்கிழங்கு கழிவுகளை சேகரித்து அதிலிருந்து எத்தனால் தயாரிப்பதற்கான ஆலையை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
சிம்லாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் உருளைக்கிழங்கு கழிவுகளை எவ்வாறு உயிரி எரிபொருளாக உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தலாம் என்பதை பற்றிய ஆய்வக ஆய்வினை சமீபத்தில் தான் முடித்துள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக அளவு உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் நாடு இந்தியா.
இதில் கைவிடப்படும் உருளைக்கிழங்கு அளவு மொத்த உற்பத்தியில் 10 முதல் 15 சதவீதமாக இருக்கிறது. எனவே கரும்பு மற்றும் சோளத்திற்கு அடுத்தபடியாக எத்தனால் உற்பத்தி செய்வதற்கான சாத்தியமான மூலப்பொருளாக உருளைக்கிழங்கு கருதப்படுகிறது.
தேசிய உயிரி எரிபொருள் கொள்கை எத்தனால் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் பட்டியலில் அழுகிய உருளைக்கிழங்கையும் சேர்த்துள்ளது.
உருளைக்கிழங்குக்கு மிகப்பெரிய அளவிலான சேமிப்பு கிடங்குகள் இந்தியாவில் இருக்கின்றன, அதுமட்டுமின்றி கணிசமான அளவு உருளைக்கிழங்கு கழிவுகளும் நமக்கு கிடைக்கின்றன. எனவே இதனை கொண்டு எத்தனால் தயாரிப்பது என்பது சுலபமானதாக இருக்கும் என சிபிஆர்ஐ விஞ்ஞானி தர்மேந்திர குமார் கூறுகிறார் . ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக இந்தியாவில் 56 மில்லியன் டன் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 8 முதல் 10% அதாவது 5 மில்லியன் டன் உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் பிற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றப்படுகின்றன.
அறுவடைக்குப் பின்பு வீணாக போகும் உருளைக்கிழங்கு அளவு 20 முதல் 25 சதவீதமாக இருக்கிறது. அதாவது 14 மில்லியன் மெட்ரிக் டன். ஏனெனில் போதிய அளவிலான சேமிப்புக் கிடங்குகள் இல்லாதது, உரிய நேரத்தில் தேவைப்படும் இடத்தில் கொண்டு சேர்க்க முடியாதது, மேலும் க இவற்றை பராமரிப்பதற்கான விழிப்புணர்வு இல்லாதது ஆகியவையே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் இதனை உபயோகமாக பயன்படுத்தலாம் என திட்டமிட்டு எத்தனால் தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications