திருச்சி: தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு விற்பனை சிறப்பாக இருக்கும் என திருச்சி பட்டாசு வியாபாரிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அதிகாரியான எஸ். லியோ ஜோசப் கூறுகையில், சுமார் 300 விண்ணப்பங்கள் பல்வேறு வியாபாரிகளிடமிருந்து பெறப்பட்டதாக தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு 289 பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
கொவிட்-19 தொற்றுநோயின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையிலிருந்து வணிகங்கள் மீண்டு வருவதால் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது, கடந்த ஆண்டை விட விற்பனை சற்று சிறப்பாக உள்ளது என்று காந்தி மார்க்கெட்டில் உள்ள ஜெயபால் என்ற பட்டாசு வியாபார நிறுவனத்தின் உரிமையாளர் ஜெ. பிரசன்னா தெரிவித்தார்.

"கடந்த ஆண்டு தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்பு நங்கள் நிர்ணயித்த விற்பனை இலக்கை விட, இந்தாண்டு 15 முதல், 20 சதவீதம் வரை, பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது. மழை பெய்யவில்லை என்றால், இதே நிலை தொடரலாம். கோல்டன் டான், லெமன் ட்ரீ, கிராக்லிங் ஸ்டார், கலர் பேண்டஸி, டாப். டக்கர் மற்றும் சூப்பர் ட்ரோன், பூந்தொட்டிகள், தரை சக்ரா மற்றும் எலக்ட்ரிக் ஸ்பார்க்லர்கள் ஆகியவை இந்த தீபாவளிக்கு வந்த புதிய வரவுகள். இதுபோன்ற புதிய ரக வெடிகளின் விலையும் குறைவாகவே உள்ளது," என்று பிரசன்னா தெரிவித்துள்ளார்.
திருச்சியில் சிந்தாமணி மற்றும் அமராவதி கூட்டுறவு துறை சார்பில் 4 பட்டாசு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிந்தாமணி கூட்டுறவுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், கடந்த ஆண்டை விட கணிசமான அளவு பட்டாசுகளை கொள்முதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
"நாங்கள் ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை பட்டாசுகளை கொள்முதல் செய்தோம். ஆனால், கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு விற்பனை குறைந்ததால், சிவகாசியில் குறைந்த அளவே பட்டாசு கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.16.43 லட்சத்துக்கு பட்டாசுகள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த ஆண்டு ரூ. 18 லட்சம்" என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆனால் இதற்கு நேர் மாறாக சிவகாசியில் உள்ள பட்டாசுக் கடை உரிமையாளர்கள் விற்பனையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக கவலை அடைந்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதற்கு முக்கிய காரணம் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரித்ததும் ஆயிரக்கணக்கான வெடிக்கடைகள் புதிதாக திறக்கப்பட்டதும் தான் என்று கூறப்படுகிறது. ஆனால் மக்கள் சிலர் குறைந்த விலையில் வெடி தருவதாக கூறும் மோசடிக்காரர்களிடமும் சிக்கி தங்களுடைய பணத்தை இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications