இந்தியாவில் வீட்டு கடன்களுக்கான வட்டிக்கு 100% வரிவிலக்கு வழங்க வேண்டும் என ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரெடாய் கோரிக்கை விடுத்துள்ளது. கிரெடாய் (CREDAI) எனப்படும் இந்திய ரியல் எஸ்டேட் நிறுவன சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 1999 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தற்போது நாடு முழுவதும் இருந்து இந்த அமைப்பில் சுமார் 13,000 நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்கின்றன.
இந்தக் கூட்டமைப்பு நிறுவப்பட்டதன் 25 ஆவது ஆண்டு தினத்தை ஒட்டி 25 வது ஆண்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது இந்தியாவில் வீடுகளின் விற்பனையை அதிகரிப்பதற்கு அரசு பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்த அமைப்பினர் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

இதன்படி மலிவு விலை வீடுகளுக்கான வரையறையை 45 லட்சத்திலிருந்து 75 முதல் 80 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டில் தான் மத்திய அரசு இந்தியாவில் மலிவு விலை வீடுகளுக்கான வரையறையை 45 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்தது.
2017 ஆம் ஆண்டிற்கு பிறகு பணவீக்கம் உயர்ந்து இருப்பதால் இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த வரம்பினை 75 முதல் 80 லட்சம் ஆக மாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது வீடு வாங்குபவர்களுக்கு சாதகமாக அமையும் என கிரெடாய் கூட்டமைப்பின் தலைவர் பொம்மன் இரானி கூறியுள்ளார்.
மேலும் தற்போது மலிவு விலை வீடுகளில் கட்டுமான பணியில் இருக்கும் 45 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் இருக்கும் வீடுகளுக்கு 1 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது, 45 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள வீடுகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அரசு இந்த மலிவு விலை வீடுகளுக்கான வரையறையை உயர்த்தும்போது இதற்காக செலுத்தப்படும் ஜிஎஸ்டி வரியும் குறையும். எனவே வீடு வாங்குபவர்களுக்கு இது லாபமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வருமான வரி சட்டத்தின் 24-வது பிரிவின் கீழ் வீட்டுக் கடனுக்காக செலுத்தப்படும் வட்டி தொகைக்கு ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு வழங்கப்படுகிறது. இந்த விதிமுறையை மாற்றி வீட்டு கடனுக்கான வட்டிக்கு 100% வரிவிலக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு சலுகைகள் வழங்கும் போது இந்தியாவில் வீடுகளின் விற்பனை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிரெடாய் அமைப்பு சார்பாக இந்தியாவில் ஆயிரம் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நிதி உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயிரம் பள்ளிகளிலும் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா 11 லட்சம் ரூபாய் வழங்கி ஸ்மார்ட் கிளாஸ் ரூம் மற்றும் கழிவறை, குடிநீர் உள்ளிட்டு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரப்படுமாம்.


Click it and Unblock the Notifications