வீட்டின் மின்சார கட்டணம், இண்டர்நெட் பில் போன்ற வீட்டில் பயன்படுத்தும் சேவைகளுக்குச் செலுத்தப்படும் கட்டணத்திற்கு கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது விரைவில் குறையும்.
மக்கள் தற்போது அதிகளவில் இத்தகைய சேவைகளுக்கு பில் செலுத்துவதிற்கு கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வேளையில் வங்கிகள் கொண்டு வந்த மாற்றத்தால் மொத்தமும் மாறப்போகிறது. மின்சார கட்டணம், இண்டர்நெட் பில், தண்ணீர் கட்டணம், OTT கட்டணம், வீட்டு வாடகை ஆகிய அனைத்தும் யூடிலிட்டி பில்கள் கீழ் வரும்.

யெஸ் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி வங்கி ஆகியவை அவற்றின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் அனைத்து யூடிலிட்டி கட்டணங்களுக்கு மே 1, 2024 முதல் புதிதாக 1% கட்டணத்தை அறிவித்துள்ளன.
இதனால் என்ன பாதிப்பு..? உதாரணமாக உங்கள் மாதாந்திர மின்சார கட்டணம் ரூ.1,500 ஆக இருந்தால், அதை செலுத்துவதற்கு யெஸ் வங்கி அல்லது ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், கட்டணத் தொகையுடன் கூடுதலாக ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்படும்.
இதேவேளையில் வாடிக்கையாளர்களுக்கு யெஸ் வங்கியில் ரூ.15,000 மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியில் ரூ.20,000 வரை ஒரு மாதத்திற்கு இலவசமாக அதாவது கட்டணமில்லாமல் பயன்படுத்த உரிமை வழங்கப்படுகிறது.
ஒரு ஸ்டேட்மெண்ட் சுழற்சியில் (statement cycle) யெஸ் வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் ரூ.15,000 க்கும் குறைவான யூடிலிட்டி கட்டணத்தை செலுத்தினால், அவர்களுக்கு எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.
நீங்கள் ஒரு ஸ்டேட்மெண்ட்டில் ரூ.15,000 க்கும் அதிகமாக யூடிலிட்டி கட்டணத்தை செலுத்த வேண்டியிருந்தால், அதன் மீது கூடுதலாக 1% கட்டணம் மற்றும் 18% ஜிஎஸ்டி (GST) வசூலிக்கப்படும். இதே விதிகள் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி கிரெடிட் கார்டுகளுக்கும் பொருந்தும், ஆனால் இலவச பயன்பாட்டு வரம்பு ரூ.15,000க்கு பதிலாக ரூ.20,000 ஆகும்.
ஏன் இந்த மாற்றம்? வங்கிகள் இந்த 1 சதவீத கட்டணங்களை அமல்படுத்துவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன:
குறைந்த மெர்சன்ட் டிஸ்கவுண்ட் விகிதம் (MDR): MDR என்பது கிரெடிட் கார்டு பரிவர்த்தனை ஒவ்வொன்றுக்கும் வணிக நிறுவனங்களிடம் பணம் செலுத்துவதற்கான கேட்வே-க்கள் வசூலிக்கும் கட்டணம் ஆகும். இந்த MDR தொகை மளிகை பொருட்கள், பயணம் போன்றவை பொறுத்து மாறுபடும். யூடிலிட்டி கட்டணங்களுக்கு MDR கட்டணம் பொதுவாக மற்ற வகைகளை விடக் குறைவாக இருக்கும்.
கிரெடிட் கார்டு மூலம் பிற சேவைகளுக்கும், பொருட்களுக்கும் பயன்படுத்தும்போது வங்கிகளுக்கு கிடைக்கும் லாபம், யூடிலிட்டி கட்டணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தும்போது குறைவாக இருக்கும். இதை ஈடு செய்யவே 1 சதவீதம் கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது.
வணிக நடவடிக்கைகளுக்கான தவறான பயன்பாடு திறன்: பல நிறுவனங்களின் ஓனர்கள் தங்களுடைய கரண்ட் பில், இண்டர்நெட் பில் ஆகியவற்றை, ரிவார்ட் பாயிண்ட் பெற பர்சனல் கிரெடிட் கார்ட் வாயிலாகச் செலுத்துகிறார்கள். இது வங்கி விதிமுறைகள் படி மிகவும் தவறு. தனிநபர் பிரிவில் வழங்கப்பட்ட கிரெடிட் கார்டு வர்த்தகத்திற்குப் பயன்படுத்தக் கூடாது.
கிரெடிட் கார்டு வரம்புகளைப் பயன்படுத்த வாடகை ஒப்பந்தம் இல்லாமலேயே தங்களுடைய நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு வாடகை செலுத்துவதாகப் பணத்தை அனுப்பி அதன் மூலமும் வெகுமதி புள்ளிகளைப் பெறுகின்றனர்.
மேலும் கிரெடிட் கார்டுகளை அதிகம் பயன்படுத்துவதன் வாயிலாகவும், அதிக தொகையைப் பயன்படுத்துவதன் வாயிலாகவும் ரிவார்டு பாயின்ட்கள் கிடைக்கிறது. ஆனால் இதை சில சிறிய நிறுவனங்கள், அமைப்புகள் முறையற்ற வகையில் பயன்படுத்தி வங்கிகளை ஏமாற்றுகிறது.


Click it and Unblock the Notifications