இந்த டிஜிட்டல் யுகத்தில் நாம் காசோலைகள் பயன்படுத்துவது என்பது பெருமளவில் குறைந்து விட்டது . ஆனால் இதற்கு முன்பு காசோலைகள் தான் மிக முக்கியமான ஒரு முறையாக இருந்தது.
பொதுவாக காசோலைகளை பூர்த்தி செய்யும்போது அதில் இடதுபுறம் மேல்முனையில் இரண்டு குறுக்கு கோடுகளை போடுவார்கள். அதற்கு என்ன அர்த்தம் என்பதை தான் நாம் இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

காசோலைகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று திறந்த காசோலை (open cheque), இவ்வகை காசோலை என்பது பாதுகாப்பானது கிடையாது. இந்த காசோலையை வைத்திருப்பவர்கள் ஒருவேளை அதனை தவற விட்டாலோ அல்லது யாரேனும் எடுத்து கொண்டாலோ அவர்களால் கூட எளிதாக அதை வங்கியில் போட்டு பணம் பெற்றுக் கொள்ள முடியும். இதன் காரணமாகவே Negotiable Instruments Act 1881இன் படி காசோலைகளில் கோடு போடும் வழக்கம் வந்தது.
குறிப்பிட்ட நபருக்கு காசோலையில் உள்ள தொகை சென்று சேர வேண்டும் என்பதற்காக தான் குறுக்கே கோடு போடப்படுகிறது. காசோலையின் முனையில் இரண்டு கோடுகள் போடப்பட்டிருந்தால் அதனை கிராஸுடு செக் (crossed cheque) என அழைப்பார்கள்.
இந்த காசோலையில் யாருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதோ அவரால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் அல்லது அவருக்கு மட்டுமே பணம் சென்று சேர வேண்டும் என்பது இதன் அர்த்தம் ஆகும்.
ஒரு காசோலையின் ஓரத்தில் இதுபோல இரண்டு கோடுகளை குறிப்பிடும்போது அந்த காசோலையில் உள்ள பணமானது அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபரின் வங்கி கணக்கிற்கு மட்டுமே செல்லும். அதில் யாருடைய பெயர் குறிப்பிட்டு இருக்கிறதோ அவரது பெயருக்கு அல்லது அவர் இந்த நபருக்கு பணத்தை செலுத்தலாம் என ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டு இருந்தால் அந்த நபருக்கு செல்லும்.
காசோலைகளில் குறுக்கு கோடுகளை போடுவதில் இரண்டு விதம் உள்ளது. கோடுகளின் இடையே Account Payee என எழுதி இருந்தால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபரிடம் மட்டுமே பணத்தை வழங்க வேண்டும் என அர்த்தம்.
உதாரணத்திற்கு காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறார் எனில், இந்த கோடுகளின் இடையே குறிப்பிட்ட வங்கியின் பெயர் எழுதப்பட்டிருக்கும். அதில் எந்த வங்கியின் பெயர் உள்ளதோ அதற்கு மட்டுமே இந்த பணம் செல்லும்.
காசோலைகள் தவறாக பயன்படுத்தப்பட கூடாது, உரிய நபருக்கு அதில் உள்ள பணம் செல்ல வேண்டும் என்பதற்கு தான் குறுக்கு கோடுகள் போடப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications