துபாய்: கச்சா எண்ணெய் விலை சில நாட்களுக்கு முன்னர் ஒரு பேரல் 90 டாலரை தாண்டியது. இதற்கு இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதல் முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டது. இன்றைய வர்த்தகத்தில் ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 90.87 டாலராக உள்ளது, அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 86.83 டாலராக உள்ளது.
ஆனால், இந்த விலை உயர்வுக்கு இஸ்ரேல் மற்றும் ஈரான் மட்டும் காரணம் இல்லை, பின்னால் ஆழமான பல காரணங்கள் உள்ளன. இதோடு உலகளாவிய அளவில் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்து வருவது, பணவீக்கம் மீண்டும் தலைதூக்குவதற்கான அச்சத்தைத் தீவிரப்படுத்தி வருகிறது இந்த கச்சா எண்ணெய் விலை உயர்வு.

மெக்சிகோ தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதியைக் குறைத்த நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை மேலும் மோசமாக்கியுள்ளது. இதன் காரணமாக, உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளரான அமெரிக்காவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள், அதிக அளவில் உள்நாட்டுக் கச்சா எண்ணெய் இருப்பை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தடை உத்தரவுகள் காரணமாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாமல் சிக்கித் தவிக்கின்றன. வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதியும் இனி தடை பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்ற அச்சம் நிலவுகிறது.
செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எண்ணெய் டேங்கர் மீது நடத்திய தாக்குதல்கள் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்தைத் தாமதப்படுத்தியுள்ளன. இந்த பிரச்சனைக்கு மத்தியில், OPEC மற்றும் அதன் கூட்டணி நாடுகள் தங்களது உற்பத்திக் குறைப்பு முடிவில் உறுதியாக இருக்கின்றன.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, கோடைக்காலத்தில் கச்சா எண்ணெய் விலையை 100 டாலருக்கு உயர்த்திவிடும் அச்சம் உருவாகியுள்ளது. இந்தியாவில் இப்போது தான் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது.
தற்போதைய வர்த்தக சூழ்நிலையைப் பார்க்கும் போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் உயருமா என்ற அச்சம் உள்ளது. மேலும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தொடும் என ஜேபி மோர்கன் சேஸ் கணித்துள்ளது.


Click it and Unblock the Notifications