என்னதான் சோலார் எனர்ஜி, எலக்ட்ரிக் கார் வந்தாலும் பொரும்பாலான உற்பத்தி தளங்கள், வாகன இயக்கங்கள் அனைத்தும் கச்சா எண்ணெய் அடிப்படையிலான பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் காரணத்தால் ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரம், வர்த்தக வளர்ச்சி, பொருட்களின் விலை உட்பட அனைத்தும் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் பல எண்ணெய் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலர் அளவீட்டை எட்டும் என கணித்திருக்கும் வேளையில், சில முக்கிய சந்தையில் தற்போது 100 டாலர் என்ற பயமுறுத்தும் விலையை எட்டியுள்ளது. இதனால் பிற சந்தைகளிலும் இதன் தாக்கம் இருக்குமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

திங்கட்கிழமை வர்த்தகத்தில் நைஜீரியா கச்சா எண்ணெய் ஆன Qua Iboe 100 டாலரை தாண்டியது, மலேசியாவின் Tapis கச்சா எண்ணெய் விலை 101.30 டாலரை தாண்டியது. இதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளது.
மேலும் சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா கச்சா எண்ணெய் உற்பத்தி பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால் 4வது காலாண்டில் சந்தையில் சப்ளை - டிமாண்ட் பிரச்சனை மிகவும் மோசமான நிலையை எட்டும் என கணிக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் சர்வதேச அளவில் அனைத்து முக்கிய கச்சா எண்ணெய் விலை குறியீடுகளும் 100 டாலரை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் பெரும் பகுதி கச்சா எண்ணெய் சப்ளையை கட்டுப்படுத்தும் opec+ நாடுகளில் மிகவும் முக்கியமான சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா தானாக முன்வந்து அறிவித்துள்ள கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பின் முடிவில் உறுதியாக உள்ளனர். இன்று WTI கச்சா எண்ணெய் 1.02 சதவீதம் உயர்ந்து 92.41 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.64 சதவீதம் உயர்ந்து 95.03 டாலராக உள்ளது.
இது தொடர்ந்தால் அடுத்த ஒரு மாதத்தில் 95 டாலர் அளவீட்டையும், அடுத்த 2-3 மாதத்தில் ஒரு பேரல் 100 டாலர் அளவீட்டையும் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையும் வாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து வருகிறது, ஆனால் அடுத்தடுத்து பல மாநிலங்களில் தேர்தல் நடக்கும் காரணத்தால் விலை குறைக்கப்படும் என்ற நம்பிக்கை கணிசமாக மக்கள் மத்தியில் உள்ளது.


Click it and Unblock the Notifications