அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பரஸ்பர வரியை விதித்து சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளார். டிரம்பின் வரி விதிப்பு சர்வதேச அளவில் வர்த்தக போரை உருவாக்கும் மற்றும் சர்வதேச பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கடுமையாக சரிந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை 63 டாலருக்கும் குறைவாக உள்ளது. இது 2021 ஏப்ரல் பிறகான மிகவும் குறைந்தபட்ச விலையாகும். பொதுவாக கச்சா எண்ணெய் விலை குறைவது இந்தியா போன்ற கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு மிகவும் சாதகமாக அமையும். இறக்குமதி செலவினம் குறையும், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைவதால் பணவீக்கம் குறையும்.
மேலும், கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பதன் மூலம் கிடைக்கும் எரிபொருட்கள், பிளாஸ்டிக்குள் மற்றும் ரசாயனங்கள் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்கள் (Petroleum derivatives) பரவலாக பயன்படுத்தப்படும் வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி துறையை சேர்ந்த நிறுவனங்களுக்கும் பெரிய நன்மையை கொடுக்கும். ஏனென்றால் பெயிண்ட் மற்றும் சோப்பு போன்ற பொருட்களில் நேரடி மூலப்பொருளாகவும், உணவு மற்றும் பானங்களை பேக்கேஜிங் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் பெட்ரோலிய பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோலிய பொருட்களின் விலையும் குறையும்.

இதனால் எஃப்எம்சிஜி துறையை சேர்ந்த நிறுவனங்களுக்கு மூலப்பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும். இதன் மூலம் இந்நிறுவனங்களின் உற்பத்தி செலவினம் குறையும். இதன் எதிரொலியாக இந்நிறுவனங்களின் லாப வரம்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு எஃப்எம்சிஜி நிறுவனத்தின் மூலதன செலவினத்தில் பெட்ரோலிய பொருட்களின் பங்கு 20-25 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதேசமயம் பெயிண்ட் நிறுவனத்தில் இது 40 சதவீதமாக உள்ளது. அதேசமயம் சோப்பு தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தி செலவினத்தில் 50 சதவீதம் பெட்ரோலிய பொருட்களுக்கு செல்லும்.
பிரபல பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குனர் வருண் பெர்ரி கூறுகையில், முக்கியமாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், பணவீக்க அழுத்தங்கள் குறைவதற்கான அறிகுறிகள் உள்ளதால், இந்த நிதியாண்டின் 2வது மற்றும் 3வது காலாண்டில் தேவை படிப்படியாக மீட்சியடையும் என்றும் நுகர்வோர் துறையில் லாப வரம்புகள் மேம்படும் என்றும் எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் விலை குறைவால் எஃப்எம்சிஜி உற்பத்தியாளர்கள் ஆதாயம் அடைய தயாராக உள்ளார்கள். நகர்புற நுகர்வு நீண்டகாலமாக மந்தநிலையில் இருந்ததால் விற்பனை மந்தமாக இருந்தது இது நிறுவனங்களின் வருவாயை பாதித்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் இந்நிறுவனங்களின் மூலதன செலவினம் குறைவதோடு, லாப வரம்பும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications