ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு எரிபொருள், மின்சாரம் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல தேவையில்லை, எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் விலை ஒரு நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் சக்தி கொண்டது.
இந்த நிலையில் கச்சா எண்ணெய் மற்றும் மின்சாரத்தின் விலையில் ஏற்படும் சிறிய அளவிலான மாற்றமும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் அளவில் தான் இன்றைய சர்வதேச பொருளாதாரம் உள்ளது.
இப்படியிருக்கையில் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் அதன் விலை நிர்ணயத்தில் ஆதிக்கம் செலுத்தும் OPEC+ அமைப்பு நாடுகள் ஒன்றாக இணைந்து தனது வருமானத்தை உயர்த்திக்கொள்ளவும், சப்ளை டிமாண்ட் அளவீட்டை சரி செய்யவும் ஒரு நாளுக்கு 11.6 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியாகி 48 மணிநேரத்திற்குள் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் சுமார் 8 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
திங்கட்கிழமை காலை ஆசிய சந்தை வர்த்தகத்தில் மட்டும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5.07 சதவீதம் உயர்ந்து 83.95 டாலராக உயர்ந்துள்ளது, அமெரிக்காவில் WTI கச்சா எண்ணெய் விலை 5.17 சதவீதம் உயர்ந்து 79.59 டாலராக உயர்ந்துள்ளது.
100 டாலர்
G7 நாடுகளின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக ரஷ்யாவின் உற்பத்தி குறைப்பு, சீனாவின் பொருளாதார வளர்ச்சி விரிவாக்கம், OPEC நாடுகளின் 1.16 மில்லியன் பேரல் உற்பத்தி குறைப்பு ஆகியவை கச்சா எண்ணெய் விலையை மீண்டும் 100 டாலருக்கு உயரும் நிலை உருவாகியுள்ளது என CMC மார்கெட்ஸ் ஆய்வாளர் டீன டெங்க் CNBC-க்கு தெரிவித்துள்ளார்.
இந்தியா
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் வெளிநாட்டு கச்சா எண்ணெய்யை நம்பியிருக்கும் இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் எரிபொருள் விலை அதிகரித்து அனைத்து உற்பத்தி பொருட்களின் விலை உயர அதிகப்படியான வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக பணவீக்கமும் அதிகரித்து மீண்டும் வட்டி விகிதங்களை அதிகரிக்க வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
2023 இறுதி வரை
OPEC நாடுகளின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு மே மாதம் முதல் 2023 இறுதி வரையில் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்யா ஒரு நாளுக்கு 500000 பேரல் வரையிலான கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக அறிவித்து மார்ச் மாதம் முதல் 2023 இறுதி வரையில் நடைமுறைப்படுத்தியது. தற்போது OPEC+ நாடுகளும் இதேபோன்ற முடிவை எடுத்துள்ளது.
சவுதி அரேபியா
ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிவிப்பு படி கச்சா எண்ணெய் உற்பத்தியில் ராஜாவாக இருக்கும் சவுதி அரேபியா ஒரு நாளுக்கு 5 லட்சம் பேரல்களும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் 1,44,000 பேரல்களும் இவ்விரு நாடுகள் உடன் குவைத், ஓமன், ஈராக், அல்ஜீரியா, கஜகஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து 1.16 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications