வளைகுடா நாடுகளில் நீடித்து வரும் அமெரிக்கா ஈரான் மோதல் உலகளாவிய எரிபொருள் சந்தையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், திங்கட்கிழமை எண்ணெய் விலைகள் திடீரென கடுமையாக சரிந்தன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ஈரானின் மின்நிலையங்கள் மற்றும் எரிபொருள் கட்டமைப்புகளுக்கு எதிராக திட்டமிடப்பட்டிருந்த ராணுவ தாக்குதல்களை 5 நாட்களுக்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு, மோதல் மேலும் தீவிரமடையும் என்ற அச்சத்தை தற்காலிகமாக குறைத்ததால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்தது.

டிரம்ப்-ன் இந்த அறிவிப்புக்கு பின், சர்வதேச அளவில் முக்கியமான குறியீடான Brent crude பியூச்சர்ஸ் விலை சுமார் 13% வரை சரிந்து, ஒரு பேரலுக்கு 96 டாலர் என்ற குறைந்த நிலையை தொட்டது. பின்னர் அது 104.1 டாலர் அளவில் 7.2% சரிவுடன் வர்த்தகமானது.
அதேபோல், அமெரிக்காவின் West Texas Intermediate (WTI) விலை 13.5% வரை சரிந்து 85.28 டாலர் என்ற நிலையை எட்டியது. பின்னர் அது 90.55 டாலர் அளவில் 7.8% குறைவுடன் நிலைநிறுத்தப்பட்டது.
அமெரிக்கா கொடுத்த கெடு
டிரம்ப் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் ஈரான் ஹார்முஸ் நீரிணையை முழுமையாக திறக்காவிட்டால், அதன் மின்சார உற்பத்தி நிலையங்களை தாக்குவோம் என்று கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு 48 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
ஈரான் நெத்தியடி
இந்த எச்சரிக்கைக்கு பதிலளித்த ஈரானின் புரட்சிகர காவல்படை (Revolutionary Guards), அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டால், இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் கட்டமைப்புகளையும், அமெரிக்கா தொடர்புடைய நிறுவனங்களையும், எண்ணெய் - எரிவாயு தளத்தையும் குறிவைத்து தாக்குவோம் என எச்சரித்தது. இதனால், மோதல் மேலும் தீவிரமடையும் அபாயம் உருவானது.
பேச்சுவார்த்தை முரண்பாடு
இந்த சூழ்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே "நல்ல மற்றும் பயனுள்ள" பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என இன்று மாலை டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் தெரிவித்தார். ஆனால், Iranian Ministry of Foreign Affairs இதை முற்றிலும் மறுத்துள்ளது.
ஈரான், தங்களது போர் இலக்குகள் நிறைவேறும் வரை எந்த பேச்சுவார்த்தையையும் ஏற்கமாட்டோம் என்று உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இந்த முரண்பட்ட தகவல்கள், சந்தையில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் தடாலடியாக சரிந்த கச்சா எண்ணெய் மீண்டும் 100 டாலர் அளவுக்கு மீண்டது.
உற்பத்தி பாதிப்பு
ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மோதலின் விளைவாக, வளைகுடா பகுதியில் உள்ள முக்கிய எரிபொருள் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. இதனால் தினசரி 7 முதல் 10 மில்லியன் பேரல் அளவிலான கச்சாஎண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
மேலும், Strait of Hormuz வழியாக கப்பல் போக்குவரத்து பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ளதால், உலகளாவிய சப்ளை செயின் பாதிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் விலை தற்காலிகமாக சரிந்தாலும், மோதல் முழுமையாக தீர்க்கப்படாத நிலையில் சந்தையில் நிலைத்தன்மை இன்னும் உருவாகவில்லை. ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கினால், விலை மீண்டும் வேகமாக உயரக்கூடும் அபாயம் உள்ளது.


Click it and Unblock the Notifications