டொனால்டு டிரம்ப் விதித்த ரெசிப்ரோக்கல் வரியால் சர்வதேச வர்த்தகத்தை தலைகீழாகப் புரட்டிப்போட்டு இந்த ஏப்ரல் மாதம் எல்லோருக்கும் மோசமான காலமாக மாறியுள்ளது. இந்த மோசமான காலகட்டத்தில் அடுத்து அதிர்ச்சி அளிக்கக் கூடிய விஷயமாக மாறியிருக்கும் முக்கியமான விஷயம் கச்சா எண்ணெய் விலை.
அமெரிக்கா ரெசிப்ரோக்கல் வரி விதித்த நாளில் இருந்து கச்சா எண்ணெய் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதிலும் கடந்த 5 நாளில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் புதிய உச்சத்திற்குச் சென்றுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதிக்கும் காரணத்தால் வர்த்தக சந்தையில் பெரிய அளவிலான பாதிப்பு உருவாகியுள்ளது.

இந்த பாதிப்பு உலகளவில் கச்சா எண்ணெய்யின் தேவை குறையும் என்ற அச்சம் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான சரிவை இன்று பதிவு செய்துள்ளது.
டொனால்டு டிரம்ப், சீனா மீது விதித்துள்ள 104 சதவீத வரிக்கு, அந்நாட்டால் பதிலடி கொடுக்க முடியாது என நினைத்துக்கொண்டிருந்த நிலையில், சீன அரசு சற்றும் எதிர்பார்க்காத வகையில் புதன்கிழமை அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது. சீன அரசு அனைத்து அமெரிக்கப் பொருட்களுக்கும் கூடுதலாக 84 சதவீத வரியை விதித்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, இந்த வர்த்தகப் போர் நிதிச் சந்தைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் 84 சதவீத அறிவிப்பும், அமெரிக்க நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடைகள் மூலம் வால் ஸ்ட்ரீட்டில் பெரும் இழப்புகள் பதிவாகியுள்ளது. இது நாளை ஆசியப் பங்குச் சந்தையிலும் எதிரொலிக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
ஏப்ரல் 2 ஆம் தேதி வரி அதிகரிப்பு அறிவிப்பு வெளியானதில் இருந்து கச்சா எண்ணெய் தனது விலை சுமார் 20% இழந்துள்ளது. இன்டெக்ஸ்பாக்ஸ் அறிக்கையின்படி, இது 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிகக் கடுமையான ஐந்து நாள் சரிவாகும்.
இன்றைய கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் சந்தையில் அனைத்து கச்சா எண்ணெய்யும் ஒரு பேரலுக்கு தலா 5 சதவீதம் வரையில் குறைந்துள்ளது. WTI கச்சா எண்ணெய் 5.86 சதவீதமும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 5.62 சதவீதமும், மர்பான் கச்சா எண்ணெய் 5.52 சதவீதம் குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் மட்டும் அல்லாமல் இந்த வர்த்தக போர் அச்சம் உலோகங்களையும் அதிகப்படியான பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. ஷாங்காய் ஃபியூச்சர்ஸ் எக்ஸ்சேஞ்சில் தாமிரத்தின் விலை எட்டு மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications