ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது 300 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் சனிக்கிழமை தாக்குதல் நடத்தியதை அடுத்து, சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் திங்கள் கிழமை ஆசிய சந்தைகளில் சரிவைக் கண்டன. பொதுவாக எண்ணெய் உற்பத்தி நாடுகளில் போர் அச்சம் நிலவினால் அதன் விலை உயரும், ஆனால் இதற்கு மாறாக தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
ஈரான் தாக்குதலின் பின்னர், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட இருந்த பெரும் உயர்வு தற்போது தணிந்துள்ளது. ஈரான் தாக்குதலால் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட சேதம் மிகக் குறைவே என இஸ்ரேல் அரசு அறிவித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் பதற்றம் குறைந்துள்ளது. இதன் காரணமாக மட்டுமே கச்சா எண்ணெய் விலை சரியவில்லை.

சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் சரிவு: ஜூன் மாத டெலிவரிக்கான பிரெண்ட் கச்சா எண்ணெய்-யின் பியூச்சர் ஒப்பந்தம் 54 சென்ட் (டாலர்) குறைந்து ஒரு பேரல் 89.91 டாலருக்கு வர்த்தகமாகிறது. மே மாத டெலிவரிக்கான அமெரிக்காவின் வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் (WTI) பியூச்சர்ஸ் ஒப்பந்தம் 57 சென்ட் குறைந்து ஒரு பேரல் 85.06 டாலருக்கு வர்த்தகமாகிறது.
ஈரான் தாக்குதலின் பின்னணி: ஈரான் தனது டமாஸ்கஸ் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என அறிவித்துள்ளது. ஆனால், இஸ்ரேல் இந்த தாக்குதலில் தனது பங்கு இருப்பதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

மூன்று தசாப்தங்களில் முதல் தாக்குதல்: மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் மீது ஒரு வெளிநாட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. அதுவும் ஈரான் சாதாரணமாக இல்லாமல் 300 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் இஸ்ரேல் நாட்டை தாக்கப் போகிறது என்பது முன்கூட்டியே அமெரிக்கா உட்படப் பல நாடுகளின் உளவுப் பிரிவு உறுதிப்படுத்தியது.
ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது. ஆனால், முன்கூடிய தாக்குதல் குறித்த தகவல் வந்ததால் இஸ்ரேல் ராணுவம் தனது ஐரன் டோம் (Iron Dome) ஏவுகணை தடுப்பு முறையை எவ்விதமான தாக்குதலையும் எதிர்கொள்ளும் வகையில் தயார்ப்படுத்தியது. இதனால் பெரும்பாலான ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதால், இந்த சேதம் மிகக் குறைவாகவே இருந்தது. ஆனால் இந்த தாக்குதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் போர் அமைச்சகம் ஈரானுக்கு பதிலடி கொடுக்க ஆதரவாக இருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், ஈரானுக்கு எதிரான எந்தத் தாக்குதலிலும் பங்கேற்கப் போவதில்லை என்று அமெரிக்கா கூறியது. உலக வல்லரசுகள், பிற அரபு நாடுகள் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் ஆகியோர் தாக்குதல் நடத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரான் நாட்டின் தாக்குதலை எதிர்பார்த்து கச்சா எண்ணெய் விலை வெள்ளிக்கிழமை உயர்ந்தது, இதனால் அக்டோபர் மாதத்திற்குப் பின்பு அதிகபட்ச அளவைத் தொட்டன. ஆனால் இந்த ஆண்டு எண்ணெய் தேவை வளர்ச்சி குறைக்கப்படுவதாகச் சர்வதேச எரிசக்தி நிறுவனம் அறிவித்த நிலையில், கச்சா எண்ணெய் விலை இந்த வாரத்தில் 1% குறைந்தது.
இதேபோல் இஸ்ரேல், ஈரான் தாக்குதலில் மிகவும் குறைந்த சேதம் மட்டுமே எதிர்கொண்ட நிலையில் கச்சா எண்ணெய் விலை சரிவைக் கண்டது.


Click it and Unblock the Notifications