மத்திய கிழக்கில் வெடித்துள்ள போர் பதற்றம், சர்வதேச எரிபொருள் சந்தையை நேரடியாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. உலகின் முக்கிய எண்ணெய் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், ஹோர்முஸ் நீரிணை வழியாக எரிபொருள் கப்பல்களை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. "எண்ணெய் கப்பல்கள், பிரச்சனை சீரடையும் வரையில் அடுத்த சில நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது" என்று ஒரு பெரிய சர்வதேச வர்த்தக நிறுவனத்தின் உயர் அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இந்த முடிவு உலக சந்தையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஏன் ஹோர்முஸ் நீரிணை இவ்வளவு முக்கியம்?
Strait of Hormuz உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக வழித்தடங்களில் ஒன்றாகும். அரேபிய பகுதியையும், ஈரானையும் இணைக்கும் இந்த குறுகிய கடல்பாதை வழியாக தினமும் சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் மற்றும் பிற எரிபொருட்கள் உலக நாடுகளுக்கு டெலிவரி செய்யப்படுகின்றன. உலகின் மொத்த எரிசக்தி தேவையில் சுமார் 20 சதவீதம் இந்த ஒரே நீர்வழி பாதையில் செல்கிறது. அதனால் இங்கு ஏற்படும் போக்குவரத்து தடை உலகளாவிய எண்ணெய் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச எரிசக்தி சந்தையில் இன்று கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்வுடன் வர்த்தகமாகின. WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் 67.02 டாலரை தொட்டு 2.78% உயர்ந்தது. Brent கச்சா எண்ணெய் 72.87 டாலரை தொட்டு 2.87% அளவில் உயர்ந்தது. Murban கச்சா எண்ணெய் அதிகளவில் 4.05% உயர்ந்து 74.24 டாலரை தொட்டது. இயற்கை எரிவாயு விலையும் 1.13% உயர்ந்து 2.859 டாலராக பதிவானது.
மத்திய கிழக்கு பதற்றம் மற்றும் உலகளாவிய விநியோக அச்சங்கள் காரணமாக எரிசக்தி சந்தையில் விலை அதிகரித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் பதற்றம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட பெரிய தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்கள் பிராந்தியத்தில் நீண்ட காலம் நடக்கும் போர் வெடிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளன.
ஈரான் நாட்டின் Islamic Revolutionary Guard Corps (IRGC) வெளியிட்ட அறிக்கையில், மத்திய கிழக்கில் உள்ள அனைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ இலக்குகளும் ஈரானிய ஏவுகணை தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
தாக்குதல்கள் எந்த நாடுகளில்?
ஈரான் அரசு, தனது தாக்குதல்கள் பஹ்ரைன், குவைத், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கப்பட்டதை உறுதி செய்துள்ளது. கத்தார், UAE, பஹ்ரைன், ஜோர்டான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இது குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
அமெரிக்காவின் பதில் நடவடிக்கை
அமெரிக்க ராணுவ அதிகாரி ராய்ட்டர்ஸ்-க்கு அளித்த பேட்டியில் ஈரானுக்கு எதிராக வான்வழி மற்றும் கடல்வழி "விரிவான" தாக்குதல்கள் தொடரும் என தெரிவித்தார். இஸ்ரேல் தலைவரும், இந்த தாக்குதல்கள் "அவசியமான பாதுகாப்பு நடவடிக்கை" எனக் கூறியுள்ளார். இதனால் இப்பிராந்தியத்தில் மும்முனை தாக்குதல் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக பொருளாதாரத்தில் தடுமாற்றம்
மத்திய கிழக்கு நாடுகள், குறிப்பாக வளைகுடா பிராந்தியம், உலகின் முக்கிய பொருளாதார மற்றும் வர்த்தக மையங்களாக விளங்குகின்றன. எண்ணெய் ஏற்றுமதி மட்டுமின்றி, நிதி சேவைகள், கட்டுமானம், முதலீடு மற்றும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியவற்றின் இயக்கமும் இப்பகுதியில் அதிகம் என்பதால் இதுவும் பாதிக்கப்பட்டு உள்ளது. GCC நாடுகளில் பெரும்பாலான மக்கள் வெளிநாட்டு தொழிலாளர்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தடைப்பட்டால், எண்ணெய் விலை திடீர் உயர்வு, சரக்கு கப்பல் கட்டண உயர்வு, உலக பங்குச் சந்தை வீழ்ச்சி போன்ற விளைவுகள் ஏற்படலாம்.
இது இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இறக்குமதி செலவு அதிகரிப்பு, பணவீக்கம் ஆகியவை சாத்தியமான விளைவுகள்.
புதிய உலக மாற்றத்தின் தொடக்கமா?
இந்த மோதல் வெறும் ராணுவ பதற்றமல்ல; இது உலக பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியலில் பெரிய மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்கலாம் என்று பல சர்வதேச ஆய்வாளர்கள் கூறுகின்றனர். "துப்பாக்கி சத்தம் எப்போது அடங்கும்? அதன் பிறகு ஈரான் எப்படி இருக்கும்?" என்ற கேள்விகள் தற்போது மிகவும் முக்கியமானதாக உள்ளது.
மொத்தத்தில், ஹோர்முஸ் நீரிணை வழியாக எரிபொருள் கப்பல் போக்குவரத்து நிறுத்தம் என்பது உலக சந்தைக்கு எச்சரிக்கை மணி.


Click it and Unblock the Notifications