அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அதிகரித்து இருப்பதை அடுத்து கிரிப்டோ சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் சீனா, இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியை உயர்த்தியுள்ளது. இது ஈக்விட்டி சந்தை மட்டுமில்லாமல் கிரிப்டோ சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3100 புள்ளிகள் வரை சரிவடைந்து தான் வர்த்தகத்தையே தொடங்கியது. அதேபோல தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21 ,900 புள்ளிகளுக்கும் கீழ் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக இந்திய முதலீட்டாளர்கள் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை இழந்துள்ளனர். பல்வேறு துறை சார்ந்த பங்குகளும் 8 சதவீதத்திற்கும் மேல் சரிவை சந்தித்துள்ளன.

ஏப்ரல் 7ஆம் தேதி அன்று கிரிப்டோ சந்தையில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது. ஒரே நாளில் பிட்காயின் மதிப்பு சுமார் 7 சதவீதம் வரை சரிவடைந்தது. பல்வேறு முதலீட்டாளர்களும் கிடைத்த லாபத்திற்கு விற்பனை செய்து வருவதால் ஈக்விட்டி மட்டும் இல்லாமல் கிரிப்டோ சந்தைகளும் சிவப்பு நிறத்திலேயே காட்சி அளிக்கின்றன. உலகின் மிகப்பெரிய கிரிப்டோ கரன்சியாக கருதப்படும் பிட்காயின் மதிப்பு சிங்கப்பூர் வர்த்தகத்தில் 77 ஆயிரம் டாலராக குறைந்தது . அதாவது ஒரே நாளில் இதன் மதிப்பு சுமார் 7 சதவீதம் வரை குறைந்திருக்கிறது.
அடுத்ததாக எரித்ரியம் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு 2023 அக்டோபர் மாதத்திற்கு பிறகு முதன்முறையாக 1538 டாலர் என்ற வீழ்ச்சியை சந்தித்தது. காயின்பேஸ் என்ற தளம் வெளியிட்டுள்ள தகவலின் படி 24 மணி நேரத்தில் சுமார் 745 மில்லியன் டாலர்களுக்கு கிரிப்டோ கரன்சிகள் விற்பனை செய்யப்பட்டு பணமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. கடந்த ஆறு வாரங்களில் இல்லாத அளவு கிரிப்டோ சந்தையில் முதலீட்டாளர்கள் பெரிய அளவில் தங்கள் வசம் இருக்கும் கரன்சிகளை விற்பனை செய்துள்ளனர் என கூறுகிறது.
இந்திய நேரப்படி காலை 7 மணி அளவில் பிட்காயினின் சந்தை மூலதன மதிப்பு 1.56 டிரில்லியன் டாலராக இருக்கிறது. அதே போல எரித்ரியத்தின் சந்தை மூலதன மதிப்பு 191.88 பில்லியன் டாலர்களாக குறைந்திருக்கிறது. சொலேனாவின் சந்தை மூலதன மதிப்பு 11.44 சதவீதம் குறைந்து இருக்கிறது. ஒரே நாளில் ஒட்டுமொத்த கிரிப்டோ கரன்சிகளின் சந்தை மூலதன மதிப்பு 2.5 டிரில்லியன் டாலர்களாக குறைந்துவிட்டது. அதாவது கிரிப்டோ சந்தை ஒரே நாளில் 6.59 சதவீதம் சரிவடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் டெய்லி டிரேடிங் வால்யூம் என்பது 137 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது, அதாவது பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்வதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. டிரம்ப் விதித்த இறக்குமதி மற்றும் அதற்கு போட்டியாக பல்வேறு நாடுகளும் அமெரிக்க பொருட்களுக்கான வரியை உயர்த்தி இருப்பது உள்ளிட்டவை காரணமாக சர்வதேச அளவில் ஒரு ஸ்திரமற்ற தன்மை நிலவுகிறது. இதுதான் கிரிப்டோ சந்தையிலும் எதிரொலிக்கிறது என இத்துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர அமெரிக்க நாடாளுமன்றத்தில் கிரிப்டோ கரன்சி சம்பந்தப்பட்ட இரண்டு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன. அவற்றின் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்தும் கிரிப்டோ கரன்சிகளில் ஏற்றம் இறக்கம் இருக்கலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications