ஒரு வருடத்திற்கு முன்பு மார்ச் 2020 காலகட்டத்தில் பிட்காயின் மதிப்பு 5000 டாலருக்குக் குறைவாக இருந்த நிலையில் மார்ச் 2021ல் தனது உச்ச அளவான 61,711.87 டாலரை அடைந்து மிகப்பெரிய வாய்ப்பை முதலீட்டாளர்களுக்கு அளித்தது.
இந்த மாபெரும் வளர்ச்சியில் கிரிப்டோ முதலீட்டுச் சந்தையில் புதிதாக 9 பில்லியனர்களை உருவாக்கியுள்ளது. கிரிப்டோ முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் கணிசமான அளவில் மட்டுமே உயர்ந்து வரும் நிலையில், 2020 முதல் உலகம் முழுவதும் புதிதாக முதலீடு செய்வோரின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இந்தத் தடாலடி உயர்வுக்கு மிக முக்கியக் காரணம் கொரோனாவும், கொரோனாவால் முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் தான்.
கிரிப்டோ பில்லியனர்கள்
35வது வருடாந்திர உலகப் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் கிரிப்டோ பில்லியனர்கள் பட்டியலில் வெறும் 4 பேர் மட்டுமே இருந்த நிலையில் இந்த வருடம் புதிதாக 9 பேர் கிரிப்டோ பில்லியனர்களாக உயர்ந்துள்ளனர். இதன் மூலம் மொத்த கிரிப்டோ பில்லியனர்களின் எண்ணிக்கை இந்த வருடம் 12 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கிரிப்டோ பில்லியனர்கள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது.
பிட்காயின் மதிப்பு
பிட்காயின் மதிப்பில் ஏற்பட்டு உள்ள அதிரடி வளர்ச்சி பணக்காரர்களுக்கும், பெரும் முதலீட்டாளர்களும் மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் பல முன்னணி நிறுவனங்களும், நிதியியல் அமைப்புகளும் கிரிப்டோ-வை முக்கியப் பேமெண்ட் ஆக ஏற்று வருகிறது. இதன் முதலீட்டாளர்கள் மத்தியில் நீண்ட கால முதலீட்டுக்கு வழிவகுத்துள்ளது.
தொடர் வளர்ச்சி
கிரிப்டோகரன்சி சந்தையில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும் பல தடுமாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதன் மத்தியிலும் பிட்காயின் உட்படப் பல கிரிப்டோகரன்சிகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
2 டிரில்லியன் டாலர்
இதன் வாயிலாக 2 மாதங்களுக்கு முன்பு கிரிப்டோகரன்சியின் மொத்த சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலராக மட்டுமே இருந்த நிலையில் வெறும் 60 நாட்கள் அல்லது 2 மாதங்கள் இடைவேளையில் மொத்த சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
உலகப் பணக்காரர்கள் எண்ணிக்கை
போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கொரோனா பாதிப்பு உலக நாடுகளை வாட்டி வதைத்த 2020ஆம் ஆண்டில் சுமார் 2,755 பணக்காரர்கள் இடம்பெற்று உள்ளனர். இது கடந்த வருடத்தை விடவும் 660 பேர் அதிகம்.
மேலும் கடந்த வருடம் இப்பட்டியலில் இருந்த பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 8 டிரில்லியன் டாலராக இருந்த நிலையில் தற்போது 13.1 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications