சென்னை: ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றாலே தனி கெத்து தான். ஆரம்பம் முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாக பதவி வகித்து வந்தார்.
ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் கேப்டனாக பொறுப்பேற்று இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட்டின் ஊதியம் மற்றும் சொத்து மதிப்பு என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள சஸ்வாத் பகுதியில் 1997 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி பிறந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். தனது 13 வயதிலிருந்து திலீப் வெங்கட் சர்க்கார் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து முறைப்படி கிரிக்கெட் பயிற்சி பெற்றார். 2010ஆம் ஆண்டு நடந்த கே டென்ஸ் கோப்பை தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இவர் 71 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் ருதுராஜ் இந்திய அணிக்குள் அறிமுகமானார். தற்போது கிரிக்கெட் உலகில் பிரபலமாக அறியப்படும் நபராக வலம் வருகிறார் ருதுராஜ் கெய்க்வாட்.
ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து தான் வருகிறது. குறிப்பாக சிஎஸ்கே அணிக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் சொத்து மதிப்பானது 36 கோடி ரூபாயாக உள்ளது. கிரிக்கெட்டில் ஐபிஎல் மற்றும் ரஞ்சிக் கோப்பை ஆகிய போட்டிகளிலும் , பிசிசிஐ-க்காகவும் விளையாடி வருகிறார்.
நடப்பு ஐபிஎல் தொடருக்காக 6 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி இவரை ஏலத்தில் எடுத்தது. கடந்த இரண்டு முறையும் சிஎஸ்கே அணி இவருக்காக ஆறு கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறது.
இவர் கேம்ஸ் 24/7, கோகிராடோஸ், எலக்ட்ரோ பிளஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விளம்பரதாரராகவும் செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் மற்றும் பிசிசிஐ உடனான ஒப்பந்தத்தில் இவருக்கு கணிசமான தொகை கிடைக்கிறது.
ஸ்போர்ட்ஸ் கீடா இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இவர் ஒரு மாதத்திற்கு 50 லட்சம் முதல் 60 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications