தனக்கென ஒரு பிராண்டை உருவாக்க வேண்டும், ஒரு தொழில் நிறுவனத்தை அமைக்க வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கு இருக்கிறது.
அப்படிதான் பிரபல கிரிக்கெட் வீரரான தீபக் சஹார், கிரிக்கெட்டில் மட்டுமல்ல புதிய தொழில்களை தொடங்குவதிலும் கெட்டிக்காரராக இருக்கிறார்.

கிரிக்கெட் வீரர் தீபக் சஹாரின் ஸ்டார்ட் அப் வாழ்க்கை டிரேட் ஃபேனடஸி கேம் என்ற கேமிங் தளத்தை 2023ஆம் ஆண்டு நிறுவிய போது தொடங்கியது. இந்த தளத்தை தொடங்கிய 2 மாத காலங்களில் டிநைன் ஸ்போர்ட்ஸ் (DNINE Sports) என்ற ஸ்போர்ட்ஸ்வியர் மற்றும் கிரிக்கெட் ஷூக்களை விற்பனை செய்யும் பிராண்டை தொடங்கினார்.
தற்போது ஐபிஎல் போட்டிகளுக்கு பின்னர் டிநைன் பிராண்டில் பல வகையான ஆடைகள் மற்றும் காலணிகளை அறிமுகம் செய்ய தீபக் சஹார் திட்டமிட்டுள்ளார்.
டிநைன் என்ற போர்ட்ஸ்வியர் நிறுவனம்: டிநைன் பிராண்டை ஸ்போர்ட்ஸ் ஆடை மற்றும் அணிகலன்களுக்கான முன்னணி நிறுவனமான மாற்ற வேண்டும் என விரும்புவதாக மணிகண்ட்ரோல் நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள தீபக் சஹார், ஐபிஎல் போட்டிகள் முடியும் தருவாயில் டிநைனில் ரன்னிங் ஷூக்கள் அறிமுகம் செய்யப்படும் என கூறியுள்ளார்.
மக்கள் ஷூ போன்றவற்றை ஆன்லைனில் வாங்குவதை விட நேரில் சென்று அணிந்து பார்த்து வாங்குவதையே விரும்புகின்றனர் என்பதை புரிந்து கொண்டிருப்பதாக கூறியுள்ள தீபக் சஹார், விரைவில் டிநைனுக்கு கடைகள் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். குறைந்தது 50 நகரங்களில் கடைகளை அமைக்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.
டிரேட் ஃபேண்டஸி கேமிங் தளம் எதிர்பார்த்த அளவு போகவில்லை என்பதால் தற்போது ஐபிஎல்லுக்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ள தீபக் சஹார், கடந்த 4 முதல் 5 மாதங்களில் 90 லட்சம் மதிப்புள்ள ஷூக்களை விற்பனை செய்திருப்பதாகவும் கிரிக்கெட் மட்டுமல்லாது தொழிலிலும் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்தில் வெற்றி கிடைக்காது: வாழ்க்கையில் மிக குறுகிய காலத்தில் வெற்றி பெற வேண்டும் என மக்கள் எண்ணுவது தவறு, விளையாட்டு, தொழில் இவை இரண்டிலுமே கடின உழைப்பும், பொறுமையும் அவசியம், நாள்தோறும் புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு நம்மை நாமே மெருகேற்றினால் நிச்சயம் ஒரு நாள் நாம் நினைத்த வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை வார்த்தைகளை வெளிப்படுத்தியுள்ளார் 31 வயதான தீபக் சஹார்.
கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் பிஸ்னஸ், குடும்பம் என அனைத்துக்கும் சம நேரம் ஒதுக்க கற்றுக் கொண்டு வருவதாகவும் தீபக் சஹார் கூறியுள்ளார். இவை அனைத்திற்கும் உடல்நலனே அடிப்படை என்பதால் இளைஞர்கள் உடல் நலனிலும் , ஃபிட்டாக இருப்பதற்கும் தனி நேரம் ஒதுக்க பழகிக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications